In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 5

அடுத்த ஒரு மாதம் அகிலா மோகன் கண்ணில் சிக்கவேயில்லை, சரி பொண்ணு திருந்திவிட்டது என்று நினைத்துக் கொண்டு இவனும் சும்மாயிருந்துவிட்டான். கல்லூரியில் எப்பொழுது வெளியில் போனாலும் அவள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு வரும், ஆனால் சுற்றிப் பார்த்தால் அவள் எங்கும் இருக்க மாட்டாள். இதெல்லாம் முதல் ஒரு வாரத்திற்குத்தான், பின்னர் உண்மையிலேயே அவளை மறந்துவிட்டிருந்தான். கனிமொழி மட்டும் அவ்வப்பொழுது வந்து அவனைப் பார்ப்பாள், ஏதாவது பேசிக்கொண்டிருந்துவிட்டு செல்வாள், அவ்வளவுதான். அகிலாவை பார்த்து மூன்று வாரம் ஆகியிருக்கும், பின்னர் ஒருநாள் கனிமொழி அவனைப் பார்க்க வந்திருந்தாள், அவள் பின்னாடியே யாரோ வருவது போல் இருந்தததால், யாரென்று கனிமொழி பின்னால் பார்க்க முயற்சித்தான்.

"யாரண்ணே தேடுறீங்க, உங்க லவ்வரையா?" நக்கலடித்தாள்.

"கனி, என்ன விளையாட்டிது, அவளே விட்டுட்டாலும் நீ விடமாட்டே போலிருக்கே?" உண்மையிலேயே கவலையுடன் கேட்டான்.

"அவ விட்டுட்டாளா, யார் சொன்னது?" அவள் முகத்தில் புன்னகை அரும்பியது விளையாட்டுத்தனத்துடன்.

"பின்னே என்ன, நான் அவளைப் பார்த்தே பல வாரம் ஆகுது, சரி அவ என்னதான் சொல்றா?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கிறா, நீங்கதான் யாரையும் காதலிக்கலைன்னு சொல்லீட்டீங்களாமே, அதனால அன்னிலேர்ந்து ஒரே ஆட்டம் தான். நீங்க தான் அவளை பார்க்கலைன்னு சொல்றீங்க. அவளைப் பார்த்தா அப்படி தெரியலை, ஒரு வேளை உங்களுக்கு தெரியாம, சுத்திக்கிட்டிருக்கிறாளோ என்னவோ?" அவளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கவேண்டும். ஆனால் சமாளித்தாள்.

"எப்பிடியோ போகட்டும், இந்த பயம் இருந்தா சரி, அதுமட்டுமில்லாம என் வம்புக்கு வராம இருந்தா ரொம்ப நல்லது." அவன் வரைக்கும் அகிலா விஷயம் வராமல் இருந்தால் சரிதான் என்று நினைத்து தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும் இரண்டு வாரங்கள் திரும்பவும் அவன் அவளைப் பார்த்திருக்கவில்லை, அன்றைக்கு மோகன் சந்தோஷமாக இருந்தான், அவனாக தேடி அலைந்து கஷ்டப்பட்டு எடுத்துச் செய்து கொண்டிருந்த ப்ரோஜட் ஒரு வழியா நல்ல விதமாக முடிந்து கிளெயண்ட் கிட்ட காட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சம் ரெக்வயர்மெண்ட் சேஞ்சும் நிறைய பக் ஃபிக்ஸிங் எல்லாம் முடிஞ்சு நாலேஞ் ட்ரான்ஸ்ஃபரும் ஆகியிருந்தது. ப்ரொஜக்ட் கொடுத்த முதலாளி அன்றைக்குத்தான் இருபதாயிரம் ரூபாய்க்கு செக் குடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அவன் காலேஜ் ப்ராஜக்ட்க்கும் இதை உபயோகப்படுத்தக் கொள்ளலாம் என்றும் என்ன சர்டிபிகெட் வேணுமின்னாலும் வாங்கிக்கொள் என்றும் சொல்லியிருந்தார்.

ஆறு மணிக்கு கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அவனும் சார்லசும் பேசிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் கனிமொழியும், அகிலாவும் நடந்து வருவது தெரிந்தது. என்னமோ அன்றைக்கு அகிலாவை வம்பு இழுக்கணும் போல் இருந்தது அவனுக்கு. ஆனால் எதற்கு வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கணும் என்று பேசாமல் இருந்தான். சொல்லப்போனால் ஒரு மாதம் கழித்து அவளைப் பார்க்கிறான். அவர்கள் இவர்களை நோக்கித்தான் வந்தார்கள். ஏதோ ஒரு பிரச்சனையில் இருப்பதை அவர்கள் முகம் காட்டிக் கொடுத்தது.

"அகிலா உங்ககிட்ட தனியா பேசணுமாம்," என்றாள் கனிமொழி

"முடியாது!" கண்டிப்புடன் சொன்னாலும் அவனிடம் விளையாட்டுத்தனம் வந்திருந்தது.

"அண்ணே கொஞ்சம் சீரியஸ்." கனிமொழி புலம்பினாள்.

"நீயே சொல்லு கனி!"

"அவதான் சொல்லணுமா, என்னன்னு தான் கேளுங்களேன்.."

அவளிடம் திரும்பி, "சரி சொல்லு!" கேட்டான்.

"தனியா பேசணும்..." சொல்லிவிட்டு குனிந்து கொண்டாள். அவன்  சொல்லாமலே சார்லசும் கனி மொழியும் நடக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அகிலா "ஒரு பிரச்சனை.." நிமிர்ந்து ஒரு முறை அவன் கண்களைப் பார்த்துவிட்டு பின்னர் தலையை குனிந்தபடியே சொல்ல ஆரம்பித்து பின்னர் தொடராமல் நிறுத்தினாள்.

"என்ன பிரச்சனை?"

"என் கூடப்படிக்கிற ஒரு பையன் என்னை காதலிக்கிறேன்னு சொல்றான், எனக்கு பயமா இருக்கு." அவள் கண்களில் பயம் தெரிந்தது. அவன் அவளுடன் விளையாடும் ஆசையில் இருந்தான்.

சந்தோஷமாய், "கன்கிராட்ஸ், ரொம்ப சந்தோஷம். அப்ப இனிமே என்னை விட்டுறுவ." நக்கலடித்தான்.

"ம்ம்ம், சீரியஸ்..." கண்களில் கோபம் தெரிந்தது.

"சரி பிரச்சனை பண்றானா?"

"இல்லை பிரச்சனையெல்லாம் ஒன்னும் பண்ணலை, லெட்டர் எழுதிக் கொடுத்தான் அதான்"

"இதிலென்ன பிரச்சனை, பிடிக்லைன்னா பிடிக்லைன்னு சொல்லு, பிடிச்சிருந்தா லவ் பண்ணு, இதுக்கு என்னை ஏன் கேட்குற?" அவன் சொல்லிமுடித்ததும் தான் தாமதம், அழ ஆரம்பித்துவிட்டாள். இதுதான் முதல் முறை அவன் குடும்பத்தில் இல்லாத பெண் அவன் முன்னாடல் இப்படி அழுவது.

"ஏய் நான் என்ன சொன்னேன்னு இப்பிடி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற?" கத்தினான்.

"நான் உங்களைக் காதலிக்கிறேன்னு தெரியும் உங்களுக்கு, இருந்தும் இன்னொருத்தனை காதலின்னு சொன்னா அழாம என்ன பண்ணுறதாம்" அவள் அவன் கண்களையே கவனித்தபடி சொன்னாள், அவன் இதற்குச் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்தபடி இருந்து அவளது கண்கள்.

"இதென்னடி வம்பாயிருக்கு, நானா உன்னை காதலிக்க சொன்னேன், ஒரு மாசத்தில திருந்திட்டேன்னு நினைச்சேன் இல்லையா?" விட்டேத்தியாகப் பதில் சொன்னான்.

"அது நமக்குள்ள உள்ள பிரச்சனை, நாம பேசி தீர்த்துக்கலாம். இதுக்கு ஒரு வழி சொல்லுங்க" அவள் சொன்னதும் “தோ பாருடா” என்று நினைத்துக் கொண்டவனாய், "என்ன சொல்லச் சொல்லுற?" அமைதியாகவே கேட்டான்.

"நான் அவன்கிட்ட, 'இந்தமாதிரி நான் மோகனை காதலிக்கிறேன், நீ வேற யாரையாவது பார்த்துக்கோ'ன்னு சொல்லப் போறேன்; இதுல நீங்களும் இருக்கிறதால உங்ககிட்டையும் சொல்றேன்" சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் ஒரு தெளிவு இருந்தது அது மோகனை ரொம்பவும் சீண்டியது.

"நீ எனக்கு செருப்படி வாங்கித்தரப்போற, அதானே?" கொஞ்சம் கோபமாகக் கேட்டான், திரும்பவும் அழத் தொடங்கினாள். அவன் அப்பொழுது எதுவும் பேசாமல் இருந்தான். சிறுது நேரத்தில் அங்கு வந்த கனிமொழி, "திரும்பவும் அழவுட்டுட்டீகளா, என்னண்ணா இது, சின்னப் பொண்ணை எப்பப் பார்த்தாலும் அழவைச்சி வேடிக்கை பார்க்கிறது."

கனிமொழியிடம் "அவ யார்கிட்டையும் எதுவும் பேச வேண்டாம், நான் அவன் கிட்ட பேசிக்கிறேன், கூட்டிட்டு போ இவளை இங்கிருந்து, எப்பப்பாரு அழுமூஞ்சியாட்டம் அழுதுகிட்டு" சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்த நாள் அந்தப் பையனை அழைத்து கண்டித்து அனுப்பினான். அவன் "இல்லை தெரியாமல் செய்துட்டேன் விஷயத்தை பெரித்தாக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அதென்னமோ ப்ரோஜக்ட் நல்லா முடிஞ்சதில் இருந்தே அகிலா ஞாபகமாவே இருந்தது, அந்தப் பிரச்சனைக்கு பிறகும் கூட அவளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அவள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. அவனுக்கும் விளையாட வேண்டும் போல் தோன்றியது வாஸ்தவம் தானே, அதனால் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டியை பார்க்க சென்றுவிட்டான். அடுத்த நாள் கல்லூரியில் முதல் மூணு மணிநேரமும் கம்ப்யூட்டர் லேப், அகிலாவுடைய கிளாசுக்கு பாடம் எடுக்க வேண்டிய லெக்சரர் வரவில்லை.

Head of the Department அவனிடம் வந்து, "தாஸ், கொஞ்சம் டைட் ஸெட்யூல், நீ அந்த ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடண்டுகளுக்கு ஏதாச்சும் பாடம் எடுத்துட்டு வந்திரேன்?" என்றார்.

"சார் சொல்றனேன்னு தப்பா நினைக்கக் கூடாது, எனக்கு உடம்பு சரியில்லை, வேணும்னா அவங்களை லேப்புக்கு வரச் சொல்லுங்களேன்" சொன்னதும், HOD, அப்பிடியா, உடம்பு சரியில்லையா பரவாயில்லை, லேப்புக்கு வரச்சொல்லிவிடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அட்டெண்டர் ஒருவரிடம் சென்று அவர்களை லேப்பிற்கு வரச்சொல்லிச் சொல்லிவிட்டு, பிறகு நேராக சார்லஸிடம் வந்து, "சார்லஸ், அவ வருவா. நான் இல்லைன்னா நிச்சயம் உன்கிட்ட வந்து கேட்பா, நீ எனக்கு உடம்பு சரியில்லைன்னும் ரெஸ்ட் ரூமில் இருக்கிறேன்னும் சொல்லு!" சொன்னதும் சார்லஸ், "மாமா, எதுக்குடா இது. இதுவரைக்கும் சரியா போய்க்கிட்டிருந்த நீ இப்ப ரூட் மாத்தறாப்புல இருக்கு." என்றான்.

"ரூட்டும் மாறலை ஒன்னும் மாறலை, அவ என்கிட்ட கண்ணாம்மூச்சி விளையாடுறா அதான்," சொல்லிவிட்டு அட்மின் ரூமிற்குள் சென்றான். அங்கே விசேஷம் என்னவென்றால், அட்மின் ரூமிலிருந்து லேப்பைப் பார்க்க முடியும் ஆனால் லேப்பில் இருந்து உள்ளே பார்க்க முடியாது. இது மாணவர்கள் தப்பு எதுவும் பண்ணாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் லேபிற்கு வந்தாள், எங்க கிளாஸ் தான் உள்ளேயிருக்கிறதுன்னு தெரிந்து கொண்டதும் என்னைத் தேடினாள். நான் இல்லாததால், நேரே சார்லஸிடம் போய் என்னவோ கேட்டாள். பின்னர் நேராக அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள். கால் மணிநேரம் இருக்கும், நேராக லேப் அட்டெண்டரிடம் போய் என்னவோ சொன்னாள், வேறு என்னவாயிருக்கும் அவளுக்கும் உடம்பு சரியில்லைன்னு சொல்லி ரெஸ்ட் ரூமிற்கு வர நினைத்திருப்பாள்.

அவள் லேபை விட்டு வெளியே வந்தாள், அவனும் அவள் பின்னே லேப்பை விட்டு வெளியே வந்து பின்னாலிருந்து அவள் தோளைத் தொட்டான். பயந்து திரும்பியவளிடம், "ஏய் லேப்பில் இல்லாமல், எங்கடி ஊர் சுத்திக்கிட்டிருக்க?" கேட்டான்.

அவள், "சே..., நீங்கதானா, நான் பயந்திட்டேன். பின்னாலேர்ந்தெல்லாம் தொடாதீங்க பயமாயிருக்கு. ஆமா உங்களுக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.

"இனிமேல் தொடலை, ஏன் உடம்புக்கு ஒன்னுமில்லையே"

"நான் பயமுறுத்தாதீங்கன்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்." விளக்கம் வேறு சொன்னாள். "நேத்திக்கு நீங்க வரலை, இன்னிக்கு சார்லஸ் சொன்னார் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அதான் கேட்டேன்".

"எனக்கு உடம்பு சரியில்லைன்னா உனக்கென்ன?" சொல்லிவிட்டு அவளையே பார்த்தான். மூஞ்செல்லாம் சிவந்து போனது உடனே, "ஏய் அழுதுத் தொலையாதே, இது காலேஜ், என் சீட்டைக் கிழிச்சிருவாங்க."

"அழமாட்டேன், பயப்படாதீங்க. உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல, நீங்க இன்னிக்கும் லீவு போட்டிருந்தீங்கன்னா. உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்."

"வருவே, வருவே. எங்கம்மாகிட்ட போட்டுக் குடுத்துருவேன். நீ என்னை காலேஜூல மிரட்டுறன்னு"

"நானா மிரட்டுறேன், நீங்கதான் சந்திச்ச முதல் நாளே கன்னத்தில் அறைஞ்சீங்க, அப்புறம் தினம் தினம் அழவைச்சுக்கிட்டிருக்கீங்க. நானும் சொல்றேன் அத்தைகிட்ட"

"சொல்லுவடி, சொல்லுவ..." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கனிமொழி அங்கே வந்தாள்.

"அய்யோ காதலர்கள் பேசும் போது குறுக்கே வந்திட்டனோ?"- கனிமொழி.

"கனி, என்னம்மா இது. உனக்கு எத்தனை தடவை சொல்றது. என்னய கேட்டா உன் பேருலத்தான் தப்பு. இவளை அதட்டி வைக்காம நீதான் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்க. இது ரொம்ப தப்பு"

"ஆமா தப்பெல்லாம் என் பேருலத்தான், உங்காளுக்கு ஒன்னுமே தெரியாது, பப்பா பாரு." கனிமொழி சீண்டினாள், ஆனால் அவள் உங்காளுக்கு என்று சொன்னதை அவன் கண்டுகொள்ளவில்லை.

"ம்ம்ம், இங்கப்பாரு உங்ககூட வெட்டிப்பேச்சு பேச எனக்கு நேரம் இல்ல, நானே உன்னை பார்க்ணும்னு நினைச்சேன். அம்மா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இந்த வாரம் வீட்டில ஏதோ விசேஷமாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரு என்ன?" சொன்னவுடன் அகிலா தலையைக் குனிந்து கொண்டாள். அவளை கூப்பிடவில்லை என்றவுடன் அவள் வருத்தப்பட்டது தெரிந்தது, இன்னும் கொஞ்சம் வம்பிழுப்போம் என்று நினைத்தேன்.

"அண்ணே என்ன இது, அகிலாவை கூப்பிடுறதில்லையா? உங்க லவ்வரா இல்லைன்னா கூட என் தங்கச்சின்னாவது கூப்பிடலாமில்லை"

"கனி அவரை ஏன் வற்புறுத்துற? அவருக்குப் பிடிக்கலைன்னா விட்டிரு!"  அகிலா ரொம்பவும் பிகு பண்ணினாள்.

"கனி, அவளையும் கூட்டிட்டு வா, ஆனா வந்தா சும்மா இருக்க மாட்டாளே, அத்தேம்பா, கால்ல விழுவா, ஓவரா பில்டப் கொடுப்பா, அதான் பயமாய் இருக்கு. நார்மலா நடந்துப்பான்னா கூப்பிட்டு வா," அவளைப் பார்த்து சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான்.

Related Articles

7 comments:

Anonymous said...

i am very impressed to read your story in first time...........

THANK U VERY MUCH....

bandhu said...

pretty impressive. amazing flow! You really got it!

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Blogging said...

கதை மிக அருமையாக இருக்கிறது..

நன்றி.

www.padugai.com

thanks

Kalai said...

I enjoyed the natural flow again (In Sujatha's words-Kannadasan kavithai pola, Jayaraj ooviyam pola). Lot of nostalgia. You are a master story teller!

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_8647.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

hellow my friend why not new post