Featured Post

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?

இன்று டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,  “@ mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும...

Friday, December 21, 2012

தபாங் 2 - கொண்டாட்டம்

ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.

ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.


ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.

சோனாக்‌ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்‌ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்‌ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)

கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.

மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.

மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.

Jack Reacher - தொடக்கம்


தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.

இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.

17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)

என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.

Saturday, December 15, 2012

என் பெயர் ராமசேஷன்

ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.

ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.

இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.

கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்தி தூங்கப்பண்ணியது.

பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.

நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.

உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.

ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”

இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.

அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.

அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை...” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது

டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி...” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.

அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்...” இது அத்தையைப் பற்றியது.

அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்... அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்...” இது அம்மாவைப் பற்றி

மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்...” இது மூர்த்திக்கானது.

...நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.

அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு... ஊப்ஸ்.

அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே - இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது...


இது மாலாவைப் பற்றிய ஒன்று.

...ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் ...எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை... அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்...

பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்...” இது பிரேமாவைப் பற்றியது.

இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.

மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.

மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.

...ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.

அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்...


...அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.

சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.

நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.

ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.

இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.

‘யூ டெர்ட்டி ராஸ்கல்’...


வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.

ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.

அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.


...உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது... என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’

‘எதைப்பற்றி?’

‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி...’


இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.

ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.

...அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்...

இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.

ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.

Friday, December 14, 2012

நீதானே எந்தன் பொன் வசந்தம்

ராலே - நார்த் கரோலினாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இன்று வெளியாகயிருந்தது. 8.00 மணி ஷோ, 8.40 வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு ‘தமிழ்’ படம் டெக்னிக்கல் காரணங்களுக்காய் திரையிடப்படாததால் மற்ற நண்பர்கள் நகர்ந்துவிட நான் மட்டும் தெலுங்குப் பதிப்பில் சென்று உட்கார்ந்தேன். ஈரானிய ஸ்பானிய படமெல்லாம் பார்க்கிறோம். திராவிடப் படம் தானே பார்த்தால் என்ன என்று வந்து உட்கார்ந்தேன்.

ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.

கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.

இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.

படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.

இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.

தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது

1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.

Thursday, December 13, 2012

இராணுவத்தினருக்கான பாலியல் சேவை

நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு பல படங்களைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம் என்று நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சதும் நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. சரி இந்தப் படத்திற்கு வருவோம், Pantaleón y las visitadoras.

எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.

படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.

சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.

ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.

பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.

கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.

இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.

படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.

எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)


ஹீரோயின் பற்றி
படம் பற்றி

Wednesday, December 12, 2012

கிழிந்து தொங்கும் முகமூடியின் கண்ணீர்த்துளிகள்

காதல். பதின்ம காதலை சத்தமில்லாத முத்தங்களுடனும் காற்றைக் கிழிக்கும் அம்புகளைத் தாங்கும் அம்பாறாத்தூளியைத் தோளில் சுமக்கும் அழகிய அர்ச்சுனனின் திறமையை பரிகசிக்கும் விதமாய் யாரோ ஒருவனின் அம்பால் அனுமதியோடோ அனுமதியில்லாமலோ கிழித்தெறியப்பட்ட காற்றை சுவாசத்திற்கு ஒப்புக்கொள்ளும் மனநிலையுடனும் இருந்த என்னை என் மனைவி மணமான சில மாதங்களுக்குள் புரிந்து கொண்டிருந்தால் தான் ஆச்சர்யமே. கேள்விகளைத் தொக்கிக்கூட அவளுடைய புரிதல்கள் நிற்கலாம், எல்லாம் தெரிந்துமா என்ற கேள்விகளுக்கான பதில்களை நானே இன்னும் தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவளுக்கான விடையின் தொலைவு எல்லைகளைக் கடந்திருந்ததில் ஆச்சர்யமெதுவில்லை. புரிதல்களுக்குப் பிறகான உறவுதான் அவளுக்கான நிம்மதி வெளியை உருவாக்கும் என்று நன்றாகத் தெரிந்தாலும் உடலுக்கான வேட்கை தனக்கான வெளியில் எகிறிக்குதித்து அடங்கி நிற்க, பின்னிரவின் பொல்லாத கணத்தில் உடல்வலியுடனோ இல்லாமலோ எழுதிக்கொண்டேயிருக்கும் புத்தகமாக நீளும் மனதின் வலியை ஒரு பக்கமாவது கிழித்துப்போட முயல்வது போல அவள் அழும் சப்தம் செவிப்பறையை அறைந்தாலும் என் விழிப்பால் அவளடையப்போகும் பீதி கண்திறக்கவிடாமல் செய்கிறது.

ரகசியங்களைத் தெரிந்துகொண்ட பிறகும் தெரியாதது போல் நடிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, போட்டு உடைத்து எல்லாவற்றையும் கழற்றிக்கொண்டு வெளியேறிவிடுவதுண்டு. பிரச்சனைகளைக் கண்டு தெரிக்காமல் வாழப்பழகு என்றும் வாழ்தலும் காலமும் பிரச்சனையை இல்லாமல் செய்யும் என்று பிரச்சனைகளின் பாரத்தால் உறக்கம் தொலைத்த பௌர்னமி இரவொன்றில் தெருவோரச் சித்தர் சொன்ன இரண்டு மாதத்தில் நான் பிரச்சனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். திருமணம் என்ற கோட்டால் இணைந்த இரு புள்ளிகளில் ஒரு புள்ளி மற்றதிலிருந்துவிலகி கோட்டின் நீளத்தை அதிகரிக்கச்செய்த முயற்சிகளைத் என் மறுமுனையை நோக்கிய நகர்தலால் தடுமாறச் செய்துகொண்டிருந்தேன். அதற்கு பௌர்னமிச் சித்தர் சொன்ன பொன்மொழிகள் மட்டுமில்லாமல் கோடு மறைந்து இரண்டு புள்ளிகளும் ஒன்றாய் ஆகமுடியாத காரணமும் புரிந்ததால் தான். மற்ற புள்ளியின் தடுமாற்றமே ஒன்றாவதால் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயமே, ஆனால் சுயம் அதுவாகயில்லாமல் போலியான ஒன்றைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது.

மனமொருமிக்காமல் ஒத்திசைவில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்த இரவு நேரத்து நாடகம் ஓரங்க நாடகமாகவேத் தொடர என் பக்கத்து வருத்தத்தைவிடவும், அவள் பக்கத்து வேதனை புரிந்ததால் நான் மறுத்தளிக்க, அவள் கழிவிரக்கத்தால் சுமூகமாய் நகர்ந்துகொண்டிருந்த பகல் பொழுதுகள் மற்றதையின் வேதனையையும் சேர்த்து கூட்டிக்கொண்டிருந்தாள். ஏதேதோ இல்லாத காரணங்களைக் காட்டி நாடகத்துக்கான ஒத்திகையில் அவள் மீண்டும் இறங்க நான் அவள் சொல்லாத காரணமும் தெரிந்தவன் என்ற முறையில் அரிதாரம் தாங்கிய அகோர முகத்தை வெறுத்தாலும் சமாதானத்திற்கான வெளி என்பக்கத்தில் திறந்தேயிருந்தது, எப்பொழுதும் திறந்தேயிருக்கவேண்டும் என்ற ஆவலுடன். திரையரங்குகளின் கனத்த மௌனத்தில் அலைந்து செல்லும் ஒளி ஒலியினூடாகவும், கடற்கரையில் நுரைத்துக் கரையும் அலைகளினூடாகவும், உணவகத்தில் 'என்ன சாப்பிடுற' என்பன போன்ற மிதமான கேள்விகளினூடாகவும் அவள் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளுடைய தோல்வியை படம்பிடித்து என்னுள் மறைத்துக் கொண்டேன்.

"காதலைப் பற்றி என்ன நினைக்கிற சரோ?"

அவளைச் சுற்றி எப்பொழுதும் வண்ணத்துப்பூச்சிகளாய் கேள்விகள் பறப்பதாய் நான் கற்பனை செய்துகொண்டிருந்தேன். அவளாய் விருப்பப்பட்டே அனுமதித்ததாயும் விடைகளத்தேடியே அவள் வண்ணத்துப்பூச்சிகளுடனான உறவை தொடங்கினாள் என்றும் பட்டது எனக்கு. எங்கள் மனவாழ்வின் தொடக்கத்திலிருந்தே அவள் எதற்கான விடையையோ தேடிக்கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. ஆனால் விடைதெரியாத, ஒப்புக்கொள்ளமுடியாத கேள்விகள் புதிதுபுதியாய் வண்ணத்துப்பூச்சிகளாய் உருவாக்கிக்கொண்டிருந்தன என்று நினைத்தேன். எனக்குப் வண்ணத்துப்பூச்சிகளாய்த் தெரிவது அவளுக்கு கொடுக்குளுடன் கூடிய குளவிகளாய் இருந்திருக்கலாம், நான் இந்தக் கேள்வி குளவியாய் இருக்குமென்று உணர்ந்தே கேட்டேன். பதில் சொல்லும் முகமாய் அவளுடைய பரிமாணங்களைத் தரிசிக்கும் ஆவலுடன். பலசமயங்களில் நான் எதிர்பார்க்கும் கேட்டால் சொல்லிவிடலாம் மனநிலையை உணர்ந்தவன் என்பதால் அவளுக்கு ஒரு அத்தகைய வாய்ப்பளிக்கும் சூழலை உருவாக்கிக்கொண்டேன்.

கோயில் எனக்கான சூழலை இயல்பாய் உருவாக்கிக்கொடுத்தது, அவள் அன்று மனக்குழப்பங்களில் மூழ்காமல் அமைதியாய் இருந்தாள். பெரும்பாலும் நிறைய பேருக்கு கோயில் கொடுக்கும் அமைதி எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவளின் அமைதி எனக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது, சூழ்நிலையை அசௌகரியமாக்க விரும்பாவிட்டாலும் இதைவிட்டால் சந்தர்ப்பம் இப்படிப்பட்டாதாய் அமையாது என்று நினைத்தவனாய் கேட்டேன்.

முதலில் பதில் சொல்லவில்லை, நிமிர்ந்து பார்த்தவள் மென்மையாய்ச் சிரித்தாள். அவள் சிரித்து எப்பொழுது பார்த்தேன் நினைவில் இல்லை. பின்னர் குனிந்து கொண்டாள் சாய்ந்திருந்த தூணை சுரண்டியபடி,

"ஏன் கேக்குறீங்க!" கேள்விக்கான மறுகேள்விதான் என்றாலும் ஒரு உரையாடலைத் தொடங்கிவிட்ட சந்தோஷம் எனக்கு சட்டென்று என் கேள்விக்கான பதிலாய் தன்னுடைய உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டும் என்ற பேராசையை ஓரங்கட்டி வைத்தவனாய், "இல்லை சும்மாதான்!" என்றவாரு அவள் மௌனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். வெகு அதிசயமாய் அந்தக் கோவில் பற்றியும் கோவிலின் சிறப்புகள் பற்றியும் சொன்னாள், அவளுடைய லாவகம் ஆச்சர்யமாகயிருந்தது மூடநம்பிக்கையில்லாமல் அவள் கோர்த்தாள், மூடநம்பிக்கையாக அவள் நினைக்கும் இடங்களில் அவளுடைய சொற்பிரயோகம் அருமையாக இருந்தது. அவள் இப்படியே எல்லா சமயங்களிலும் என்னிடம் சகஜமாகயிருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவளால் எப்படி என்னை வெகு எளிதாய் வசப்படுத்திவிடமுடிகிறது என்ற கேள்விக்கு, அவள் அவளுக்கு உண்மையாய் இருப்பதால் தான் என்ற பதிலே என்னால் ஒப்புக்கொள்ள முடிந்த ஒன்றாயிருந்தது.

கோயிலை விட்டு வெளியில் வந்து பூ வாங்கும் சமயத்திலேயே அவள் தன் கூட்டுக்குள் சென்றுவிட்டதாகப் பட்டதெனக்கு. மல்லிப்பூ பிடிக்கவில்லையென்றால் கனகாம்பரம் வாங்கி வைத்துக் கொள்ளலாம், ஆனால் நினைவில் இருக்கும் அழிக்கமுடியாத நினைவுகளை மீண்டும் கிளம்பும் வன்மை கொண்டதாய் நீளும் ஒன்றாய் மல்லிப்பூ இருக்கலாம் என்று நினைத்தேன் நான். நான்கு சுவர்களுக்குள் அவள் உணர்வதாய் நினைக்கும் சுயத்தை வெளியில் அவள் இழப்பதைப் போல் காட்டிக்கொண்டதில்லை, வெளியில் அவளுடைய இயல்பான மனநிலை ஆச்சர்யமளிப்பதாயிருந்தாலும் என் பொருட்டு செய்துகொண்ட சமாதனமாய் நான் புரிந்துகொண்டேன்.

"நான் இங்க கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்னு இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே?"

வற்புறுத்தல்கள் சீண்டத்தொடங்கிய பொழுதில், மனைவியைக் காரணம் காட்டி தப்பிக்க மனம் வராத நெருக்கமுடியை உறவினர் வீட்டில் அவள் காதில் கிசுகிசுக்க, அப்பொழுதும் கோயில் பார்த்த அனுபவித்த ரசித்த அதே புன்னகை. தோளைக் குலுக்கியபடி "பிரச்சனையில்லை" என்று சொன்னவளின் கண்களின் உண்மையிலேயே பயம் இல்லை.

அவள் என்னிடம் தைரியமாகப்பேச தன் மனதில் இருப்பதைக் கொட்டிக்கவிழ்க்க இது போன்ற ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருந்தாள் என்று நினைக்காவிட்டாலும், அன்று அவள் தன் ரகசியக்கதவுகளை திறந்துகாட்டிவிட முடிவு செய்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. அன்றை விட கோப்பைகள் அதிகமான நாட்களில் உணராத போதை அன்று வெகுவிரைவாக வந்தது, என் கட்டுப்பாட்டில் இருந்து சுயம் வெளியில் குதித்ததை உணரமுடிந்தாலும் அடக்கமுடியவில்லை. பழக்கம் நிலை தடுமாறாமல் இருக்க உதவினாலும் மனம் வெகுவாகத் தடுமாறிக்கொண்டிருந்தது. பாதிவழியில் காரை நிறுத்தி அவள் கொடுத்த சந்தர்ப்பம் போதுமாயிருந்தது என்னைத் திறந்துகாட்ட, சில வரிகள் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்தன.

"நீயும் ரமேஷும் காதலிச்சது எல்லாம் எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு முன் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்று கொடுத்த 50 பக்க ரிப்போர்ட்டில் பார்த்திருக்கேன்"

அதற்கு மேல் சொல்ல எனக்கு எதுவுமில்லை, அவளுடைய ஆச்சர்யத்தை வெளிகாட்டாமல் இருக்க அவள் முயற்சி செய்யவில்லை. எனக்கு பதிலொன்றும் சொல்லாமல் வெகுநேரம் காரில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். வேதனையோ வருத்தமோ துக்கமோ நான் அவள் பக்கம் என்று சொல்ல அருகில் சென்று கட்டிக்கொண்ட மறுகணம் இருவரும் கோடானது அந்த இருட்டில் கரைந்து புள்ளியாய் மாறியதாய் உணர்ந்தேன் நான். அத்தனை நாளாய் பேசாமல் வைத்திருந்த அத்தனையையும் பேசிக் களைத்தது அவள் உதடு, எத்தனை சுலபமாய் முடிந்திருக்ககூடிய ஒன்றை இழுத்தடித்ததற்காய் மனம் குழம்பியது. சட்டென்று வெளியைக் குளிராக்கிய காற்றொன்று அடித்துச் சென்ற கண்ணீர்த்துளிகள் நான்கு இருளில் காணாமல் போனது.

Tuesday, December 11, 2012

விஸ்வரூபம் - கமல் பிரச்சனை

விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச்  முறையில் வெளிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில் எல்லோருக்கும் இதைப்பற்றிச் சொல்ல என்னவோ இருக்கத்தான் செய்கிறது. கேபிள் சங்கர் எழுதிய பதிவு நன்றாக வந்திருந்தது, உத அண்ணன் எப்பொழுதையும் போல குழப்பம் ஆதரிப்பதா இல்லையா என்பதில், பதிவு முடியும் பொழுது ஒரு முடிவு சொல்வது அவருக்கு எப்பவும் குழப்பம் தான். ஜாக்கியின் பதிவுகளும் கூட பிரச்சனையின் கோணத்தைப் பற்றிப் பேசியது, அப்படியே லக்கியுடையதும்.  இடையில் ப்ருனோ ப்ளஸில் சொன்ன விஷயமும் கூட முக்கியமானதாகப் படுகிறது.

“here are two groups of movie watchers

1. Those who see in Theater only
2. Those who see in Home only - pirated CD / Torrent
3. Those who see in both
-
Now, producer gets money only for the movies watched in Theater
Producer gets no money for those who watch through Torrents and Pirated CDs
DTH is aimed at monetizing this group”

ப்ருனோ சொல்வதைப் போல் நான் முதல் வகைக்காரன். பெரும்பாலும் நானறிந்து வெளியாகும் எனக்குப் பிடித்தப் படங்களையெல்லாம் திரையில் சென்று மட்டும் பார்ப்பேன், ஆனால் வழியில்லாமல் அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கும் பொழுது தியேட்டரில் வெளியாகாமல் போனால் இணையத்தில் பார்க்கும் கோஷ்டி.

சுயநலத்திற்காய் என்னால் தியேட்டரில் படங்கள் வெளியாகாமல் போகும் காலமொன்று பயமுறுத்துவதாய் இருந்தாலும், DTH ஒரு முக்கியமான மாற்றமாகவும் வரவேற்கவேண்டியதாகவும் எனக்குப் படுகிறது. ஆனால் ஏற்கனவே குறைந்தும் அழிந்தும் வரும் தியேட்டர்கள் இதன் காரணமாய் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல குறையவும் செய்யும் என்று தான் நான் ஊகிக்கிறேன். இங்கே அமெரிக்காவிலே மிகப்பிரபலமான படங்கள் தவிர்த்து மூன்றாம் நான்காம் நாளே தியேட்டர்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறேன். எத்தனை முதல் வார படம் பார்த்த பொழுதுகளில் தனியாக நான் மட்டும் தியேட்டரில் இருந்தேன் என்று நினைவில் இல்லை, ஆனால் பத்து படங்களாவது இருக்கும்.

ஆனால் இது சிறுபடங்களுக்கும், பரீட்சார்த்தமான படங்களுக்கும் மிகவும் உதவியாகயிருக்கும். பாலா போல் ப்ரிவ்யூவையே 100 நாள் ஓட்ட வேண்டிய நிலை வராமல் இருக்க உதவலாம். இதை நம்பி படமெடுப்பவர்கள் வரலாம், அதன் காரணமாய் நல்ல உலகத் தரமான படங்கள் மேலெழ வாய்ப்பிருக்கிறது. இந்தப் படமும் ஆளவந்தான் போலத்தான் இருக்குமென்று பட்டாலும் அப்படித்தான் நான் தசாவதாரம் வந்த பொழுதும் நினைத்தேன், ஆனாலும் கூட இந்தப் படம் இன்னமும் ஆளவந்தான் போல இருக்குமென்றே மனம் சொல்கிறது. இந்த ஆளவந்தான் போல என்று சொல்வதில் எங்கும் படம் நல்ல படமா அல்லாத படமா என்ற கேள்வியில்லை பொதுமக்கள் பிடிக்குமா காதா என்கிற கருத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன்.

சினிமாவில் எடுத்தப் பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே போடும் முட்டாள் கமல் தோற்றுவிடக்கூடாதென்று மனம் பரபரக்கிறது, அந்த குறைந்தபட்ச மனசாட்சிக்காக. நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கமலுடைய மனம் புரிந்தாலும் மஜித் மஜீதி சொல்லியிருந்தது போல் நல்ல படமெடுக்க இத்தனை பணம் தேவையில்லை, கமல் இதில் ஹாலிவுட்டைப் பின்பற்றுகிறார். பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் ஹாலிவுட்டில் கூட ஹீரோக்கள் இந்தப் பிரமாண்ட பட இடைவெளியில் நல்ல ஹாப் பீட் படங்களை கொடுத்துவிடுகிறார்கள். கமல் போன்ற கலைஞன் அது போன்ற இடைவெளில் மொக்கை நகைச்சுவைப் படம் தான் செய்ய முடிகிறது. இந்த விதத்தில் கமல் மோகன்லாலை பின்பற்றியிருக்கலாம், ஆனால் கமல் பிறந்த இடப் பிரச்சனை இது. கமல் கேரளாவிலோ இல்லை ஈரானிலோ பிறந்திருந்தால் வேறு மாதிரி முயன்றிருக்கலாம்; இன்னொன்று ஈகோ. எத்தனையோ நல்ல கலைஞனாக இருந்தால் ஒரு நல்ல இயக்குநர் அவருக்குக் கிடைக்காமல் போக அது காரணமாகயிருந்துவிடக் கூடாது.  ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து ஹாலிவுட்டைப் பின்பற்றும் கமலால் முடிந்தது இத்தனையே! அதை அவர் சுயநினைவோடு செய்கிறார், இங்கிருக்கும் கிணற்றில் இருந்து எப்பொழுதும் தப்பித்துவிடவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது உழைப்பும் இருக்கிறது, காலம் இல்லை.

லைஃப் ஆஃப் பை பார்த்த பொழுது அந்தத் தமிழன் கேரக்டரை ஏன் ஒரு தமிழன் செய்திருக்க முடியாது என்று மனம் அரித்தது, ஏன் கமல் அந்தப் படத்தில் நடித்திருந்திருக்கக்கூடாது, இர்ஃபான் கான் நடிப்புப் பிடித்திருந்தாலுமே கூட. சொந்தமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளிவிடுகிறார் என்று கேள்விப்படுகிறேன். நடுநிலையிலிருந்து இதுபோன்ற சூழ்நிலையில் மனம் நகர்ந்துவிடுகிறது, இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. பணம் வெல்வது தோற்பது பற்றிய கவலையில்லாமல் கமல் படமெடுக்கும் காலம் வரவேண்டும். கமலின் உச்சம் இன்னும் நிகழ்ந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன், சீக்கிரம் அதை அவர் அடையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

Rain Man


 


ஆட்டிஸம்(Autism) ஒரு மனநிலை பாதிப்பது சம்மந்தப்பட்ட ஒரு நோய். இதன் பாதிப்பு உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், செயல்பாடுகள், விருப்புவெறுப்புகள் சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசப்படும்.(Autism is classified as a neurodevelopmental disorder). நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சில சமயங்களில் இந்த வேறுபாடு அதிகமாகயிருக்கும். இந்தக் குறைபாட்டுக்கான மிகச்சரியான விளக்கம் தெரியாவிட்டாலும், ஜீன்களின் கோளாறுகள்தான் இதன் காரணம் என்று உணரப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த குறைபாடு உள்ளவர்களிடம், சாதாரணமாக உள்ளவர்களின் ஜீன்களில் ஏறக்குறைய ஏழு வித்தியாசமான நிலைப்பாடுகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.

பலசமயங்களில் இந்த குறைபாடு உள்ளவர்களை உருவத்தோற்றத்தின் படி வேறுபடுத்த முடியாவிட்டாலும், அவர்கள் மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். தற்சமயத்தில் இதன் பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கு ஏற்றபடியான சிகிச்சைமுறைகள் கொடுக்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக குழந்தைகளின் வயது மூன்றிற்கு குறைவாக இருக்கும் பொழுது, அந்தக் குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே இந்த நோய் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா எனக் கண்டறியலாம்.

இந்தக் குறைபாடு உடைய குழந்தைகள் சாதாரணமாக சமூகத்தில் பங்குபெறமுடியும். கல்வி நிறுவனங்களில் படிக்க, வேலை பார்க்கும் அலுவலகங்களில். ஆனால் இந்த நோய்க்கான முழுமையான தீர்வு என்பது இதுவரை சாத்தியப்படாமலே இருக்கிறது.

எனக்கும் இதைப்பற்றி நேரடியாகவே தெரியும், எப்படியென்றால் நான் பிறந்து வளர்ந்த இடத்தில், அறிவாலயம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஒரு பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியின் பேருந்து எங்கள் வீட்டை கடந்து செல்லும் பொழுதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு நான் டாட்டா காட்டுவேன். அதைப்போலவே அவர்களும். கோயிலுக்கு செல்லும் பொழுதும் அவர்கள் பள்ளியில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதும் டாட்டா காண்பிப்பதுண்டு. அதில் அவர்கள் அடையும் சந்தோஷம் சொல்லிப்புரியாது. இதே போல் எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணுக்கும் இந்த நோய் இருந்தது. அந்தப்பெண்ணை பார்க்க பாவமாக இருக்கும் எனக்கு. ஆனால் அந்தக் குடும்பத்தின் மனநிலை சற்று வித்தியாசமாக இருக்கும்.

அதாவது உலக அளவிலேயே இந்த மாதிரியான ஆட்டிஸம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம், குணப்படுத்த வேண்டாம் என்பதற்கான இரண்டு வகையான மனநிலைகள் இது சம்மந்தப்பட்ட குடும்பங்களிடம் நிலவுகின்றன. இதில் குணப்படுத்த வேண்டாம் என்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சிகிச்கையளிக்கவில்லை என கட்டுரைகள் சொல்கின்றன. இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் சொன்ன அந்த வீட்டினரிடம் இந்த மனநிலையை பார்த்துள்ளேன். அவர்களைப் பொறுத்தவரை இந்த நோயுடன் இருந்தாலும் அவர்களுடைய பிள்ளையே அந்தப் பெண் என்றும் அதற்கான சிகிச்சை தேவையில்லையென்றும் அவர்கள் என் பெற்றோரிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதில் சாவன்ட்(The autistic savant phenomenon is sometimes seen in autistic people. The term is used to describe a person who is autistic and has extreme talent in a certain area of study) என்றொரு வகையுண்டு அவர்களுக்கு, இந்த நோய் இருந்தாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதைகளாக, சிலசமயம் நாம் நினைக்க முடியாத அளவில் மேதைகளாக இருப்பார்கள். சாவன்ட் என்பதற்கு அறிவாளிகள் அல்லது தெரிந்துகொள்பவர்கள் என்ற பொருள்வரும்(The word comes from the French word savant, meaning scientist (literally, knowing)). டானியல் டெம்மெட் என்ற ஒரு இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அற்புதமான திறமையுண்டு அது, அவன் மனனம் செய்யும் திறமை. அவன் பை என்றழைக்கப்படும் கணித மாறிலியின் 25514ம் இலக்கம் வரை கணக்கிட்டு அதற்கான ஐரோப்பிய சாதனை விருதைப் பெற்றவன். பையின் மதிப்பு 3.14 இது 14க்கு பிறகு முடிவில்லாதது, இந்த தொடர்ச்சியையே அந்த சிறுவன் கணக்கிட்டு சொல்லியது. இது போன்ற திறமையிருக்கும் பலருக்கு அவர்கள் அதை எவ்வாறு கணக்கிட்டார்கள் எனச் சொல்லத் தெரியாது ஆனால் இந்த சிறுவனுக்கு அவன் கணக்கிட்ட உத்தியையும் சொல்லத்தெரிந்தது ஒரு அற்புதமான விஷயம்.

ஆனால் மற்ற சில பாதிக்கப்பட்டவர்களைப்போல இந்த சிறுவனால், மற்றவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது துரதிஷ்டமே.

இந்த வகையான பாதிப்புள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது, இது ரெய்ன் மேன்(Rain Man) என்ற திரைப்படத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திரைப்படத்தைப்பற்றியும் கொஞ்சம்.


தமிழ் மசாலாப்படத்துக்கான அத்துனை விஷயமும் உள்ள ஒரு படம் தான் ரெய்ன்மேன், ரொனால்ட் பாஸ்(Ronald Bass), மற்றும் பாரி மோரோவ்(Barry Morrow) எழுதி, பாரி லெவின்ஸன்(Barry Levinson) இயக்க கிம் பீக்(Kim Peek) என்ற ஒரு மூளைவளர்ச்சி தவறிய(மேக்ரோசெப்பாலி) ஆட்டிஸ்டிக் சேவன்ட் கிடையாது, வேறுவகையானது, ஒரு உண்மையான கதாப்பாத்திரத்தைப்பற்றிய படம் இது.

அந்த வருடத்திற்கான, சிறந்த கதாநாயகன், சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதைக்கான நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் இது. (முழுவிவரம் கடைசியில்). நான் முதலில் இந்தப்படத்தைப் பார்த்தது அதில் நடித்து ஆஸ்கார் பெற்ற டஸ்டின் ஹாப்மென்னுக்காக(Dustion Hoffman) இல்லை. ஒரு இடத்தில் டாம் குருயிஸ்(Tom Cruise மிகவும் பிடித்த நடிகர்) உடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்ற காரணத்தால் சொந்தமாக வாங்கி பார்த்து வியந்துபோன படம் இந்த ரெய்ன் மேன்.

பணக்கார அப்பாவின் மகன் சார்லி பப்பிட்(Charlie Babbitt), ஒரு முறை அப்பாவிற்கு தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு போக, அப்பா கோபமாகி தன் கார் திருட்டுபோய்விட்டதாக போலிஸில் சொல்லிவிட. இரண்டுநாள் ஜெயிலில் இருந்த சார்லி கோபமாகி அப்பாவிடம் திரும்பாமல் வேறு இடத்திற்கு போய்விடுகிறார். பின்னர் வாகனங்களை விற்பவராக மாறிவிட்ட சார்லிக்கு அவன் தந்தை இறந்து போன விஷயம் தெரியவர இறுதிமரியாதை செலுத்த வருகிறான். அப்பொழுதுதான் தன் தந்தை மூன்று மில்லியன் சொத்துக்களையும் ஒரு ட்ரெஸ்டி பெயரில் எழுதுவைத்துவிட்டு, அதன் பெனிபிஷியரியாக(உபயோகப்படுத்துபவராக) யாரையோ வைத்துவிட்டு போய்விட்டதாகவும் இவனுக்கு தன் தந்தையின் ரோஜாப்பூத்தோட்டம் மட்டுமே கொடுத்ததும் தெரியவரும்.

பின்னர் யார் அந்த உபயோகப்படுத்தும் ஆள் எனத்தேடி சார்லி நகரும் பொழுது சூடுபிடிக்கத்தொடங்கும் எக்ஸ்ப்ரஸ், இங்கேதான் வருவார் ரெய்மண்ட் பப்பிட்(Raymond Babbitt - Dustion Hoffman) என்ற சார்லியின் சகோதரர். இவர் ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். இவர் பெயரில் தான் சார்லியின் தந்தை மொத்த சொத்தையும் ட்ரெஸ்டி வழியாக எழுதுவைத்திருப்பார். அதற்கு காரணம் ரெய்மண்டிற்கு பணம் என்ற ஒரு விஷயமே தெரியாது. பின்னர் சார்லி தன் சகோதரனை கடத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து அந்த ட்ரெஸ்டியை மிரட்டுவது என பக்காவான மசாலாப்படம். ரெய்மண்ட் விமானத்தில் ஏறமாட்டேன் எனபயந்து பயணச்சீட்டு எடுத்த விமானத்தை மறுக்க. சகோதரர்களின் சாலைவழிப்பயணம் தொடங்கும்.

ரெய்மண்ட் பற்றி, ரெய்மண்டின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை, யாரையும் அவர்கள் கண்களை நோக்கிப்பார்க்காமல், தனக்கென்ற வாழ்க்கையை வாழும் ஒரு திறமையான, மனனம் செய்வதில் மிகத்திறமையான ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். அதாவது முட்டாள் விஞ்ஞானி. தான் படிக்கும் பார்க்கும் அத்துனை விஷயங்களையும் மனனம் செய்யும் திறமையுள்ள ரெய்மண்டை அவருடைய பழக்கவழக்கங்களிலில் இருந்து மாற்றினாலோ இல்லை, வேறுஒன்றை செய்ய கட்டாயப்படுத்தினாலோ தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு கத்துவார்.

இப்படியாக செல்லும் இந்தப்பயணத்தில் முதலில் தன் சகோதரனின் பணத்தை மட்டுமே குறிவைக்கும் சார்லி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான பாசத்தை கண்டுகொள்ளும் படி சொல்லியிருப்பார் இயக்குநர். முன்பே சொன்னதுபோல் ஒரு அச்சுஅசல் மசாலாப்படம். ஆனால் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார்கள் அனைவரும்.

தன்னுடைய கடன் செலுத்தமுடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு சகோதரனுக்கு மொத்த பணத்தை எழுதிவைத்துவிட்டாரே எனக்கோபப்படும் இடங்களிலும் விமானத்தில் பயணம் செய்ய பயந்து ரெய்மண்ட் கத்தும் இடத்தில் இயலாமையையும் பின்னர் தன் சகோதரனால் சீட்டுக்கட்டில் அதிக பணம் கிடைத்ததும் சந்தோஷப்படும் இடத்திலும் வெகு அழகாக நடித்திருப்பார் டாம் குருஸ்.

படத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாரென்றால் அது டஸ்டின் ஹாப்மென்தான். தான் முதலில் தோன்றும் இடத்திலிருந்து முடிவு வரை அந்த கதாப்பாத்திரத்தின் ஆளுமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். நடை உடை பாவனைகளில் பிரமாதப்படுத்தியிருப்பார். தன் சகோதரனும் அவன் காதலியும் இணைந்திருக்கும் ஒரு தர்மசங்கடமான நேரத்தில் அங்கு வந்து அவர் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் வெளிப்படுத்தும் ஒரு மௌனம் அற்புதமோ அற்புதம், காட்சி அமைப்பும் பிரமாதமாகயிருக்கும்.

தன் புத்தகத்தை எடுத்த சார்லி படிப்பதை பிடிக்காமல் காட்டும் முகபாவத்தில் ஆகட்டும், ஒவ்வொரு விஷயமாக தன் ஞாபகத்திலிருந்து அவர் சொல்லும்பொழுது அவருடை சலனமற்ற கர்வமற்ற முகத்திலாகட்டும், ஒரே இரவில் டெலிபோன் டிக்ஷ்னரியிலிருந்து ஏ முதல் ஜி பாதி வரை மனப்பாடம் செய்துவிட்டு பின்னர் அடுத்தநாள் பார்க்கும் அட்டன்டர் பெண்ணின் தொலைபேசி நம்பரை சொல்லவதிலாகட்டும், பின்னர் கொட்டப்பட்ட டூத்பிக்கின் எண்ணிக்கையை சில வினாடிகளில் சொல்வதிலாகட்டும் படம் காண்பித்திருப்பார் மனுஷன்.


Kim Peek

கடைசியில் தமிழ்ப்படம் போல் முடிக்காமல் ரெய்மண்ட் பப்பிட் தான் இருக்கும் பழைய இடத்திற்கே சென்றுவிடுவதாக முடித்திருப்பார் இயக்குநர். அந்த ரெய்மண்ட் பப்பிட் என்ற கதாப்பாத்திரம் முன்பே சொன்னதைப்போல் ஒரு உண்மைக் கதாப்பாத்திரம். கிம் பீக், சுமார் 9600 புத்தகங்களை மொத்தமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார். அந்த நபரின் வாழ்க்கையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருப்பார்கள் படத்தில். நிச்சயமாக படத்தில் கலந்திருக்கும் நகைச்சுவை உணர்வுக்கும், டஸ்டின் ஹாப்மென், மற்றும் டாம் குருஸ்ஸின் நடிப்பிற்கும் சேர்த்து ஒருமுறை பார்க்கலாம்.

Academy - 1988
Best Actor Dustin Hoffman - Win
Best Director Barry Levinson - Win
Best Original Screenplay Ronald Bass, Barry Morrow - Win
Best Picture - Win

Monday, December 10, 2012

மறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி


"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளூம் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒரு புறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை" என்று பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகம் கவர்ந்ததால் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இணையத்திலும் சரி புத்தகங்களாகவும் சிடி, டிவிடிக்களாகவும் பாலியல் கதைகள் படங்கள் நிறைய கேட்டுப் பார்த்து படித்ததால் புத்தக வடிவில் அதைப் படிக்கும் தேவையில்லை என்னிடம்.

ஆனால் இந்த பின் அட்டை வசனம், இந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் மீதான ஒரு ஆர்வத்தை இயல்பாகவே கொண்டு வந்தது. படித்து முடித்ததும், புத்தகம் பற்றி தே.லூர்து சொல்லியிருக்கும் வாசகமான,

"ஏதோவொரு பயன் கருதியே இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பவை என்று சொல்ல இயலாது. இவை நகைப்பூட்டுபவை என்பதில் ஐயமில்லை. வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்பவை என்பதும் தெளிவு." என்ற வரிகளுடன் உடன்படுகிறேன்.

'நான் ஏன் இதை எழுதுகிறேன்?' பத்தியில் கி.ரா சொல்வதை கவனிக்க வேண்டும். அவர் 'பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு...' '...பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு - கி.பி என்பது போல் - நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது..." என்று சொல்கிறார். அப்படியே முன்னுரையில் '...பெண்களை அடக்கி ஒடுக்கு வைத்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு எப்படித் தண்ணி காட்டியிருந்தார்கள் அவர்கள் என்று பல கதைகள் நகைச்சுவையோடு சொல்லும்...' சொல்வதை வைத்து, கல்வெட்டுகள் போல், செப்புப்பட்டயங்கள் போல் இந்தக் கதைகளும் வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறையை சமுதாய அமைப்பை புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். அவர் சொல்வது போல் பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்றூ தெரிந்து கொள்ள முடிகிறது.

ஏதோ இந்தக் கதைகளைத் தொகுத்துவிட்டார்கள் நாமும் படிக்கிறோம், பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில்லை 'சூசகமா'த்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். சில கதைகள் நகைச்சுவையாகவும் சில கதைகள் பெருஞ்சிரிப்பை வரவைப்பவையாகவும். சில இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கொண்டு வருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைச் சேகரிக்க கி.ராவும் சரி கழனியூரானும் சரி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் இந்தப் புத்தகத்தின் பின்னால் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படும் 'கதைகள் கறந்த கதை' இவை எத்தனை கடின முயற்சியில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட பாலியல் கதைகளை பதிப்பில் கொண்டு வருவது எத்தனை கஷ்டமான விஷயம் எனபதும் தெரியவருகிறது.

உயிர்மை ஸ்டாலில் இந்தப் புத்தகம் இருந்த பொழுது இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து எடுக்காமல் நகர்ந்துவிட்டேன் முதலில் பின்னர், 'எனி இந்தியன்' மூலமாய் வாங்கிக்கலாம் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன் :). ஆனால் இது அப்படியொன்றும் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்று தீர்மானித்து நேரடியாய் உயிர்மை ஸ்டாலிலேயே வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் நாளை பெங்களூரிலோ, சென்னையிலோ புத்தக்கக் கண்காட்சியின் பொழுது இந்தப் புத்தகம் உங்கள் கண்ணுக்குத் தட்டுப்படலாம். அப்பொழுது என்னைப் போல் தடுமாறாமல் மனித வாழ்வியலில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் 'கதைகள் கறந்த கதை' பற்றி, கல்யாண வீடுகளில் இரவு வேலை செய்ய் நேரும் பொழுது வய்ற்காட்டில் களை எடுக்கும் நேரத்தில் பின்னர் வெயிலின் வெம்மையை மறக்க வைக்கவும் இம்மாதிரி கதைகள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் கழனியூரன், பெண்கள் பெரும்பாலும் பெண்களிடமே இது போன்ற பாலியல் கதைகளை பரிமாறிக் கொள்வதாகவும், ஒரு ஆடவன் முன் அதுவும் அந்நிய ஆடவன் முன் சொல்லத் தயங்குவதாகவும். வயது வித்தியாசம் இன்றி பால் வேற்றுமையில் பாதிக்கப்பட்டு நாணம் கொண்டு சொல்வதில்லை என்கிறார். அதே போல் சில கதைகளை ஆண்கள், ஆண்களுக்கு மட்டும் சொல்வதாகவும் அதிலும் கொஞ்சம் பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வார்கள் என்பவர் ஆண்களிடம் இருக்கும் வேறு விதமான பிரச்சனையைக் கூறுகிறார், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் படித்தவர்களிடம் தாங்கள் என்ன கதை சொல்ல என்று பெரும்பான்மையான ஆண்கள் இருப்பார்கள் என்றும் முன்பு பதிவு செய்த கேசட்டைப் போட்டுக் காட்டியதும் சொல்லத் தொடங்குவார்கள் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறுபட்டு 'நீ என்ன படிச்ச?' என்று கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார்.

ஒருமுறை நான் போடும் 'அழிப்பாங்கதை'யை அழித்தால் கதை சொல்வதாகச் சொன்ன ஒருவரின் கதையை அழிக்க முடியாததைச் சொல்கிறவர், பின்னர் 'நாங்க என்ன படிச்சோம் ஏட்டுச் சுரக்காய்.' என்று லாவகமாய்ப் பேசி கதை கறந்ததைக் கூறுகிறார். இவர்கள் சேகரித்த கதைகளைப் போலவே கதை சேகரித்த கதையும் அருமையாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் 'மறைவாய் சொன்ன க்தைகள் தொகுப்பில் இருந்து இன்னும் ஒரு கதை.

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.

ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.

ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.

அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.

சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.

கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.

அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.

அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.

ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.

அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.

அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.

தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.

விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.

அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.

அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.

'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.

அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.

அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.

*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.

Sunday, December 09, 2012

மறைவாய் சொன்ன கதைகள்

எனக்கு அடல்ஸ் ஒன்லி வகை கதைகள் அறிமுகம் ஆன பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நினைவில் இருக்கிறது அப்பொழுது நான் அரைக்கால் ட்ரௌசர் போட்ட பையன் என்று. அது தர்ம சங்கடமான சமயம், மதிய சாப்பாடு முடிந்து சற்று தூக்க கலக்கமாக இருக்கும் சமயங்களில் பையன்கள் ஆரம்பித்து விடுவார்கள்.

பின்னர் கல்லூரிக் காலங்களில் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இதற்கு கொஞ்சம் குறைந்தது கிடையாது, politically correctஓ இல்லையோ கூட வேலை செய்யும் பெண்களைப் பற்றி ஏக காலத்தில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கும் XXX ஆக இல்லாமல் பெரும்பாலும் XX ஆகவோ இல்லை வெறும் X ஆகவோ தான் இருக்கும். தண்ணியடித்தால் 'பஞ்சாபி A ஜோக்குகள்' சொல்லும் PM ஒருத்தர், தண்ணியடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பெண்கள் பற்றி பேசும் 'சாஃப்ட்வேர்' நண்பர்கள் வரை இன்னமும் நிறைய பேர் நிறைய கதைகள் உண்டு.

பெரும்பாலும் யாரோ ஒருவர் ஆரம்பித்து பின்னர் மற்றொருவர் தொடர்வது என எல்லோரும் ஒரு கதையாவது சொல்லியிருப்பார்கள். நிறைய கதைகள் நினைவில் நிற்பது இல்லை பெரும்பாலும் இது போன்ற கதைகளை வெறுமனே கேட்டு அந்த நேரத்தில் சிரிக்கத்தகுந்தவையாகத்தான் இருக்கும்.

இதே போல் கிராமத்தில் நடமாடும் 'மறைவாய் சொன்ன கதைகளைத்' தொகுத்து கி.ராஜநாராயணனும் கழனியூரானும். மறைவாய் சொன்ன கதைகள் என்ற தொகுப்பாய் விட்டிருக்கிறார்கள் அதிலிருந்து ஒரு கதை சாம்பிளுக்கு. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு கதை சிறியதாய் இருப்பதைத் தவிர்த்து வேறு ஒரு காரணமும் கிடையாது :).

ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.

ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் 'பேசிப் பெறக்கிக் கிட்டு' இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.

தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி 'அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி' என்று விபரம் கேட்டான்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, 'கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க' என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.

அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.

ஒருநாள் 'பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?' என்றூ கேட்டான்.

பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, 'நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு' என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.

இப்பமும் அதே மாதிரி 'பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.' என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.

பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.

ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.

பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் 'எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்' என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு 'விபரம்' புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.

அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. 'வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!' என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.

பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று 'என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்' என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது.

அறியாத பிள்ளைகள் கேட்கிற சில எசக்குப்பிசக்கான கேள்விகளுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் நாம் பொய்யான பதிலைச் சொன்னால் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்று சொல்லி முடித்தார் கதை சொன்ன தாத்தா.


என் பள்ளிப் பருவத்தில் சொன்ன கதை ஒன்றும் அப்படியே.(எனக்கு இந்த வகைக் கதைகளை கூறுவதற்கான மொழி அமையணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.)

பெரும்பாலும் எனக்கு அறிமுகமாகியிருந்த கதைகள் பெண்ணொருத்தியுடையதோ இல்லை ஆணினுடையதோ இந்த விஷயத்திலான சாமர்த்தியத்தை சூட்சமத்தை விளக்குவதாக இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும், முன்பு நண்பர்களாயிருந்து பின்னர் எதிரிகளான இருவரும் அவர்களில் ஒருத்தரின் காதலியும் ஒரு இரவு ஒரு மண்டபத்தில் தங்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காதலியுடன் வந்திருப்பவரின் பெயர் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம், மற்றவர் பெயர் செல்வம். இது சுலபமாக கதை சொல்வதற்காக மட்டும். :) பின்நவீனத்துவ கதைக்காரர்கள் ஒருவனை அதீதன் என்றும் மற்றவனை நன்மொழித்தேவன் என்றும் அவளை ஆத்மார்த்தி என்றும் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. அதீதனும் நன்மொழித்தேவனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்று 'சொல் என்றொரு சொல்' சொல்பவர்கள் ஒதுங்கி நின்று செல்வம், சந்திரனாக கதைக்கலாம்.

சந்திரனுக்கு அவர்களுடைய நண்பர்கள் செல்வத்தைப் பற்றி நிறைய சொல்லி காதலியை பதுவிசாக பார்த்துக் கொள்ளும் படியும் ஒரு நிமிடம் விட்டாலும் செல்வம் தவறு செய்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லி அனுப்ப சந்திரனுக்கோ தர்மசங்கடமான நிலை, இதில் செல்வத்தின் 'காமப் புகழ்' வேறு உலகம் அறிந்தது என்பது சந்திரனுக்கும் தெரிந்து தான் இருந்தது. சரி எப்படித்தான் அவனும் 'தில்லுமுள்ளு' செய்யறான்னு பார்ப்போம் என்று ஒரு வித மமதையில் ஒரு திட்டம் போட்டான். தன் காதலியின் யோனியின் மீது கையை வைத்துக் கொண்டே தூங்குவது என்றும் எப்படியும் அவன் 'தவறு' செய்ய நினைத்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் திட்டம் போட்டான். இது போல் கை வைத்துக் கொண்டு வெகுநேரம் தூங்காமலும் வேறு இருந்தான் செல்வம் பற்றிய பயத்தினாலே, பின்னர் ஒருவாறு தூங்கிப்போனான் அவனுக்கே தெரியாமல் ஆனால் கைமட்டும் விழிப்பா அங்கேயே இருந்தது. இருட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு கொசு அவன் தொடையில் கடிக்க அதை அடிக்க சந்திரன், அவன் காதலி மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு நொடியில் மீண்டும் வைக்கும் பொழுது பிசுபிசுவென்று இருந்தது என்றும் இதிலிருந்து செல்வம் எந்த அளவுக்கு சூச்சமக்காரன்னு புரியும் என்று சொல்லி கதை முடியும்.

Saturday, December 08, 2012

கன்னடப் பைங்கிளியுடன் காதல் மொழி

“அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…”

தோசை கொண்டு வந்து வைத்த அம்மாவின் காதில் கிசுகிசுத்தேன், நைனா உடன் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு தெளிவாக காது கேட்காதென்பதால் தைரியமாகச் சொன்னேன். அம்மாவிடம் இதுவரை எத்தனை முறை இதுபோல் சொல்லியிருப்பேன் நினைவில் இல்லை, ஆனால் பள்ளி கல்லூரியில் படித்த விடலைக்காலங்களில் விளையாட்டாய்ச் சொன்னதற்கும் இப்போது வேலையில் இருந்துகொண்டு சீரியஸாகச் சொல்வதற்குமான வித்தியாசம் அம்மாவின் கண்களில் தெரிந்தது. பெங்களூரில் இருந்து அன்று காலை தான் திருச்சிக்கு வந்திருந்தேன். மைசூர் எக்ஸ்ப்ரஸ் காலை 5 மணிக்கெல்லாம் திருச்சியில் இறக்கிவிட, டாக்ஸி பிடித்து வீட்டிற்கு வந்து சேர அரைமணிநேரம் ஆனது. அம்மாவிடம் சொல்லியிருந்த ப்ளான், வந்ததும் டிபன் முடித்துக்கொண்டு கும்பகோணம் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்குச் செல்வதுதான். ஆனால் சொல்லாமல் போட்டது இந்தக் குண்டு.

“என்னம்மா சொல்ற! யாரு அந்தப் பொண்ணு?”

அம்மா பெரிதாய் பதற்றப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டாய்ச் சொல்லாத பொழுது இந்த விஷயத்தை சரியானபடி முடிக்கணுமே என்ற கவனம் மட்டும் இருந்தது.

“அதாம்மா நம்ம எதுத்த வீட்டு ஹவுஸ் ஓனர் பொண்ணு! நேத்ரா…”

“டேய் அது கன்னட பொண்ணுல்ல, அவ தமிழ் கூட தெளிவா பேசமாட்டாளேடா! ஏண்டா இப்புடி… ஆமா இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது உங்கக்கா கூட ஒன்னும் சொல்லலையே!”

“அக்காவுக்கே தெரியாதும்மா முதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு அவகிட்டக் கூட சொல்லலை, மம்மி நீதான் நைனாகிட்ட பேசணும்.”

அம்மாவின் முகம் ஏகப்பட்ட உணர்ச்சிகளை அள்ளித் தெறித்தபடியிருந்தது. அம்மாவுக்கு என்னால் காதலிக்கக்கூடமுடியும் என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இருக்காதா பின்ன லேசான முன்வழுக்கையும், மாநிறமும், பெண்களிடம் விட்டுக்கொடுக்காத ஈகோவும் சேர்த்து நான் காதலிப்பதென்பது அம்மாவின் கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகத்தான் இருந்தது, ஆனால் என்ன செய்வது காதல் அப்படித்தான் எங்கே எப்படி எப்பொழுது வரும் என்று தெரியாது.

ஒருநாள் பெங்களூர் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி என்னிடம்,

“நீவு யாவா லாங்க்வேஜ்ஜு நல்லி கெலசா மாடுதீரா?” என்று கேட்க முதலில் ஆச்சர்யமே வந்தது, புதுசா டீவியோ, மிக்ஸியோ இன்னபிறவோ வாங்கியிருந்தால் வந்து என்ன விலை எப்ப எங்க வாங்கினீங்க இந்த இடத்தில் வாங்கினா இன்னும் விலை கம்மியா இருக்குமே! என்பது போன்ற உரையாடல்கள் ஆன்ட்டி செய்து பார்த்திருக்கிறேன் அதுவும் என்னுடன் அல்ல என் அக்காவுடன் தான் ஆனால் இன்றைக்கு என்னமோ நீ எதில் வேலை பார்க்குற என்ற கேள்வி திகைக்க வைத்தது.

“ஜாவா ஆன்ட்டி ஏன் கேக்குறீங்க?” ஆன்ட்டி பெரும்பாலும் எங்களுடன் கன்னடம் கலந்த தமிழில் தான் பேசுவார், நாங்கள் தமிழில் பதில் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவருக்கு நன்றாகவே தமிழ் புரியும் என்ன பேசத்தான் வராது எளிதாய்.

“நன்ன மகளிகே ஜாவா நல்லி சொல்பா டவுட்டு இதே, சொல்ப சஹாய மாடுதீரா?” கேட்க, எனக்கு பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நான் புனேவில் வேலை செய்து கொண்டிருந்ததால் பெங்களூரில் ஹாஸ்டலில் இருந்த அக்கா எங்களுக்காக தனிவீடு பார்த்துவிட்டுச் சொல்ல நான் பெங்களூர் வந்ததும் ஓனர் ஆன்ட்டி அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது அவருக்கு என்னைப் பார்த்து நல்ல அபிப்ராயம் வந்திருக்க வாய்ப்பில்லை தான். அவரின் முகத்தோற்றமே அதை வழிமொழிந்தது. டெல்லி, புனே என வழக்கமாக நடந்த விஷயம் என்பதால் எனக்கு கோபம் வரவில்லை. சும்மாவா சொன்னாங்க பர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்ட் இம்ப்ரஷன்னு, ஆனால் எனக்கு எங்கேயுமே பர்ஸ்டே பெஸ்ட் இம்ப்ரஷன் கிடைச்சிருக்காது. ஆனால் சொல்லிவைத்தது போல் ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்குள் அந்த பெஸ்ட் இம்ப்ரஷனை கொண்டுவந்திருக்கிறேன்.

சிகரெட் குடிக்காமல், தண்ணியடிக்காமல், பெண் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவராமல் காலம் தாழ்த்தி வாடகை கொடுக்காமல் என்று சாதாரண விஷயங்களைச் செய்து வீட்டின் உரிமையாளர்களைக் கவர்ந்திருக்கிறேன். கவர்வதென்றால் நடிப்பதென்றும் வருமென்றால் தைரியமாகச் சொல்வேன் நடிக்கவில்லை என்று.

“ஒன்னும் பிரச்சனையில்லை ஆன்ட்டி, அனுப்புங்க சொல்லித் தர்றேன்”

காசு கொடுத்து, சாப்பாடு போட்டு, கௌரவத்தைக் கொடுத்து, என்னையும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய்த ஜாவா எனக்கு ஒரு காதலியையும் கொடுக்கும் என்று நான் முதலில் நம்பவில்லை தான். நேத்ராவின் காதலுக்கு கண்ணில்லைன்னு தான் சொல்வேன், அதை அவளிடமும் சொல்லியிருக்கிறேன்.

“ப்ரீத்தீ கே கண்ணு இல்லா அதுரே மெதுலு இதே!”

உன் மூளையைத் தூக்கி குப்பையில் போடுன்னு சொல்ல ஆசைதான், ஆனால் அதனுடன் துணைச்செறுகலாக நம்மைப்பற்றிய நல்ல விஷயம் வருவதால் மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

“உனக்கு ஏண்டா கண்ணு என்னைப் போய்ப் பிடிச்சது?” கேட்டாலும் பதில் நேராய் வராது.

“அஷ்டேன்னா? நனகே கொத்து நின்னனு யாரு ப்ரீத்திசில்லா! நானு அஷ்டோன்டு கனிஷ்டா நா நினகே! அஷ்டே.” எனக்குமே கூட தெரியாது என்னை நேத்ரா ஏன் காதலித்தாள் என்று, ஜாவாவில் இருந்த இருக்கும் அசத்தலான ப்ரொக்கிராமிங் அறிவாய் மட்டும் இருக்க முடியாதென்றே நினைத்தேன், இன்னொரு நாள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த ஒருநாள், இது அது என்று தனித்தனியாய் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் உன்னைப் பிடிக்கும் என்று சொன்னாள்.

நான் அவளிடம் உங்க அம்மா அப்பாகிட்ட நம்ம காதலைச் சொல்லிவிடு என்றதும் ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், அவள் காதலைச் சொல்லி நானும் மறுக்காமல் ஒப்புக்கொண்ட சில வாரங்களில் நான் அவளிடம் இதைச் சொல்லியிருந்தேன். எனக்கு உள்ளூற பயம் இருந்தது, ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி உன்னை நம்பி சின்ன பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வது என்று கேள்விவருமென்று. அதனாலேயே சாதாரண காதல் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த பொழுதே அவளிடம் அப்படிச் சொன்னேன்.

மொபைல் “எடுறா டேய்!” என்று நேத்ரா அவளாய்ப் பேசி செட் செய்துகொடுத்திருந்த ரிங்க்டோனில் அலற, பார்த்தாள் அவள் தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மொபைல் ஃபோனே உபயோகிக்காத என்னை வழுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று மொபைல் வாங்கித் தந்தவளும் அவளே, எவ்வளவோ வற்புறுத்தியும் பேஸிக் மொபைல் ஒரு கையோடு, ஒரு காலில் நிற்க தொலைந்து போ சனியனே என்று ஒப்புக்கொண்டிருந்தாள்.

“யெகே அஷ்டொண்டு டைம் தொகொண்டியா போன் ரிசீவ் மாடொகே?”

ரெண்டு ரிங்க் தான் முடிந்திருக்கும் மூன்றாவது ரிங்கிற்குள் எடுத்திருந்தேன்.

“சரி சொல்லு…” எதுவும் விளக்கம் சொன்னால் வருத்தப்படுவாள் என்பதை அந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே கண்டுகொண்டிருந்தேன்.

“எந்த ஹுடுகா நீனு, ஏனு அஷ்டோண்தா ஹுடுகரு வெய்ட் மாடுதாரல்லா ஹுடுகியரா காலிகே! அவன் அவன் எப்படா பிகருக்கு ஃபோன் போடலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நீ என்னடான்னா நான் ஃபோன் பண்ணினாலும் ஒழுங்கா பேசமாட்டேங்குற.”

நான் பதிலெதுவும் பேசாமல் “ம்ம்ம்…” என்றேன்.

“இன்னிக்கு மதியானம் லீவு போட்டுட்டு என்னை வெளியில் கூட்டிக்கொண்டு போகணும்.” மூச்சைக்கூட விடாமல் தொடர்ச்சியாய்,

“I know you are too busy, but today no excuses..."

அவளை பேசவிடாமல் இடைபுகுந்தேன், தெரியும் விட்டால் தொடர்ச்சியா சளசளவென்று பேசுவாள் என்று, நான் காலை இரண்டு மூணுமணிநேரமாவது வேலை செய்யலாம் என்று நினைத்தவனாய்,

“சரி சரி நான் வர்றேன் நீ காலேஜுக்கு வெளியில் நில்லு, PM தடிமாடு வர்றேன் நான் அப்புறம் பேசுறேன்…” சொல்லிவிட்டு சட்டென்று கட் செய்தேன். அவளுக்குமே கூட என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதில் அத்தனை விருப்பம் இல்லைதான், எனக்கு நன்றாய்த் தெரியும் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் விருப்பம் அதிகமென்று. இல்லாவிட்டால் காதலிக்கவோ பைக்கில் இடுப்பில் கட்டிக்கொண்டு ஊர் சுற்றவோ சினிமாவிற்குச் சென்று படிக்கட்டில் உட்கார்ந்து கடலை போடவோ அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க நியாயம் இல்லை தான். அழகான, அவளுக்காய் என்ன வேண்டுமானால் செய்கிற ஒரு காலேஜ் வாலிபன் கிடைத்திருப்பான் தான், என்னமோ என்னைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறாள். நான் நினைத்தேன் இன்றைக்குமே கூட அவள் அம்மா அப்பாவிடம் எங்கள் காதலைச் சொல்லியிருப்பள் என்றே நினைத்தேன் அதனால்தான் இத்தனை தூரம் செல்கிறாள் என்று.

மதியம் தலையை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு நேராய் அவள் காலேஜிற்குச் சென்றால், நேத்ரா வெளியிலேயே வெள்ளைச் சுடிதாரில் நின்றுகொண்டிருந்தாள். சாதாரணமாகவே எனக்கு அவளைப் பார்த்தால் தேவதையைப் போன்ற ஃபீலிங் வரும், இன்று வெள்ளைச் சுடிதாரில், ஷேம்பு தலைமுடி காற்றில் கவிதை எழுத, சுற்றிப் போர்த்தியிருந்த ஷால் ‘தோ விழுந்துட்டேன்’ என்று நழுவத்துடிக்க அருகில் வந்து நின்றவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஹேகிதே இது!” சுடிதாரைத் தொட்டுக்காட்டிக் கேட்க நான் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தேன். அவள் என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது,

“ஒடித்தினி நினகே” என்று சொல்லி தலையில் கொட்டினாள், நான் சிரிப்பை நிறுத்தாமல் “இரு இரு நான் ஏன் சிரிச்சேன்னு தெரியுமா? ப்ரெண்டுஸுங்க எப்பவும் சொட்டத்தலையோட இருக்கிற ஒருத்தன் அழகான பொண்ணைக் கூட்டிக்கொண்டு திரிந்தால், பாருடா அவனுக்கு வந்த வாழ்வை அப்படின்னு புலம்புவாங்க! இன்னிக்கு நம்ம இரண்டு பேரையும் பார்த்து அப்படி எத்தனை பேர் வயிறெரியப்போகுதோன்னு நினைச்சு சிரிச்சேன். ஆமா நீ என்ன நினைச்சு கொட்டின!”

அவள் தலையில் அடித்துக் கொண்டாள்,

“நானு பேர அன்கொண்டிதே…” சொல்லிவிட்டு நிறுத்தியவளை தொந்தரவு செய்து மேலே சொல்ல வைத்தேன்.

“நீவு நன்னனே சுடிதார் இல்லாகே சன்னாகே இத்தேனி அந்தா நெனெசிகொண்டே…”

காதல் என்று சொல்லி இத்தனை நாட்களுக்குள் இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்த வந்தது என்று தெரியாது எனக்கு அவள் நம்பிக்கை பயத்தை உண்டாக்கியது அதனால் தான் சீக்கிரமே அம்மா அப்பாவிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்தத் தொடங்கினேன்.

நைனா என்னிடம் நேராய் எதுவும் இந்த முறையும் பேசவில்லை, தாராபுரத்தை டிஜிட்டல் எஸ்எல்ஆரில் சுட்டுக்கொண்டு வந்த அன்று அம்மா தான்,

“நைனா எதுவும் சொல்லலை உன் விருப்பப்படி செய்யச் சொன்னிச்சி, ஆனால் அவங்க வீட்டில் பேசிடுவியாம். அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொன்னிச்சி.”

அவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது தான், இதற்கு மேல் அவர் எதையும் சொல்லமாட்டார் என்றும் நினைத்தேன் வழக்கம் போல், “தண்ணீ நிறைய குடி, கொஞ்ச தூரமாவது நடந்துட்டு வா இந்த வயசிலேயே பாரு எவ்வளவு குண்டா இருக்க…” எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா அட்வைஸ் மட்டும் தவறாமல் இந்த முறையும் வந்தது. இருவருக்கும் டாடா காண்பித்துவிட்டு மைசூர் எக்ஸ்ப்ரஸில் உட்கார்ந்தால் நேத்ரா நினைவுதான் வந்தது. அவளை அந்த வாரக்கடைசியில் பேசச் சொல்லியிருந்தேன். உள்ளூர ஹவுஸ் ஓனரைப் பார்த்தால் சாதாரணமாகவே எனக்கு உதறும் அதுவும் நாங்கள் காதலிக்கத் தொடங்கினதும் நன்றாகவே உதறியது. அவள் பேசிவிட்டதாகவும் அவங்கப்பா என்னைப் பார்த்து பேசவேண்டும் என்று சொன்னதாகவும் போன் போட்டு பீதியைக் கிளப்பியிருந்தாள். நான் திருச்சியில் இருந்து மைசூர் வரும் வரை அவங்கப்பாகிட்ட எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றும் உபயோகப்படாமல் போனது.

நேத்ரா அப்பா நேராய் “காவிரி பிரச்சனைப் பற்றி என்ன நினைக்கிற?” கேட்ட கேள்வி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. நான் என்னென்ன வகையிலோ இந்த உரையாடலை எனக்கு நானே செய்து பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர இப்படி ஒரு கேள்வியை நிச்சயம் எதிர்பார்க்கலை. என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு, ஒருவேளை என்னைப் பற்றி நன்றாய்த் தெரிந்து நான் தமிழ்நாட்டிற்கு சப்போர்ட் செய்வேன் என்றும் தெரிந்து என்னை வெட்டிவிட இந்தப் பிரச்சனையை இழுக்கிறாரா என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

மனதிற்குள் முழுவதுமாய் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா துரோகம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தாலும் வெளியில் சொல்லித்தான் என் தமிழ்நாட்டுப்பற்றைச் செய்யணுமா? கர்நாடகா செய்வது தவறில்லை என்று சொல்லிவிட்டு அவரை ஜெயித்துவிடலாமா என்று யோசித்தேன். அவர் கண்களை தொடர்ந்து செல்லும் முயற்சிகளை நிராகரித்தவராய் சலனமில்லாமல் இருந்தது கண்கள். நான் ஆவது ஆகட்டும் என்று நினைத்தவனாய்,

“அங்கிள் கர்நாடகா செய்றது தப்பு அப்படின்னு நான் நினைக்கிறேன், அங்க மக்கள் விவசாயத்திற்கு தண்ணியில்லைன்னு தவிக்கிறப்ப, அது சரின்னு உச்சநீதிமன்றமே சொன்னதுக்கப்புறமும் பிடிவாதமா இப்படி செய்யறது சரியில்லை. நாமெல்லாம் இந்தியர்கள்னு பெருமைக்காகச் சொல்லிக்கிறோம் பக்கத்து மாநிலத்துக்கே தண்ணீர் தரமாட்டேன்னு சொல்லுது. நான் எக்ஸாக்டா கன்னடிகா மக்கள்னு சொல்லலைன்னாலும். கர்நாடக அரசியல்வாதிகள் செய்றாங்கன்னு சொல்றேன்…” சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

நெருங்கி வந்து முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

“நீ சொல்றது சரியா தப்பான்னு நான் பார்க்கலை, நீ இப்படி உன் ப்ரண்டுங்க கூட உங்கக்கா கூட ஆர்க்யூ பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னிக்கு நான் கேக்குறேன்னு மாத்தி சொல்றியா இல்லையான்னு பார்த்தேன். உண்மையா இருக்கிறவனுக்கு மதம் மொழி ஜாதி எல்லாம் தூசி மாதிரி தொடைச்செறிஞ்சிட்டு போய்டலாம்.”

என்றவர் தொடர்ச்சியாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என் வருங்காலப் திட்டங்கள் என்ன என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். நானும் என் குடும்பமும் நேத்ரா குடும்பமும் எவ்வளவோ வற்புறுத்தியும் நேத்ரா ஆறு மாதம் கழித்துத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொன்ன காரணத்தால் நானும் ஒப்புக்கொண்டேன்,

“என் முழு பேர் என்ன தெரியுமா தாஸ்?!” வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவளை நேத்ரா என்று கூப்பிட்டுத் தெரியும் முழுப்பெயர் தெரியாது. அப்படி எதுவும் இருக்காது என்றே நினைத்தேன் நான்.

“ஏன் கேக்குற நேத்ரா! அதுதான் உன் பேரு.”

“நின்ன மொக்கா, நான் ஹெசுரு நேத்ராவதி, இதே நினகே கொத்தில்லா மத்தே நின்னா ப்ரெமினிசி மாதவி மாட்கொண்டே அந்த ஹொரகே ஹேலிதரே எல்லாரு நன்ன ஹொடிதரயோ!” அவள் தலைகீழ் நின்றதால்,

என்ன அரசியலோ ஃபோரமில் இன்னமும் ஓடிக்கொண்டிருந்த முங்காரு மழ தியேட்டரில் பாப்கார்ன் பெப்ஸியுடன் எங்கள் காதல் வளர்ந்தது பின்னணியில்.

…சூரியுவா சோனியு சூசிதே நின்னதே பரிமளா
இனியாரா கனசுலா நீனு ஹோடரே டலமலா
பூர்ண சந்திர ரஜா ஹாகிதா
நின்னய முகவனு கண்டக்ஷணா
நா கைதி நீனே செரெமனெ
டப்பி நன்ன அப்பிகொ ஒம்…மே ஹக்கே சும்மனே…

கன்னடாவில் மிகப்பிரபலமான பாடல் வரிகள் ஓட அவள் எனக்கு அர்த்தம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

- கன்னட பாஷைக்கு உதவிய நண்பர்களுக்கு நன்னி!

Friday, December 07, 2012

Men Rules

Men Rules

We always hear "the rules" from the female side. Now here are the rules from the male side.

Shopping is NOT a sport. And no, we are never going to think of it that way.

--

Crying is blackmail.

--

Ask for what you want. Let us be clear on this one:

Subtle hints do not work!
Strong hints do not work!
Obvious hints do not work!
JUST SAY IT!

--

‘Yes’ and ‘No’ are perfectly acceptable answers to almost every question.

--

Come to us with a problem only if you want help solving it. That's what we do. Sympathy is what your girlfriends are for.

--

A headache that lasts for 17 months is a problem. See a doctor.

--

Anything we said 6 months ago is inadmissible in an argument. In fact, all comments become null and void after 7 days.

--

If you think you're fat, you probably are. Don't ask us.

--

If something we said can be interpreted two ways, and one of the ways makes you sad or angry, we meant the other one.

--

You can either ask us to do something or tell us how you want it done.

Not both

--

If you already know best how to do it, just do it yourself

--

Whenever possible, please say whatever you have to say during commercials.

--

Christopher Columbus did not need directions and neither do we.

--

ALL men see in only 16 colours, like Windows default settings.

--

Peach, for example, is a fruit, not a colour. Pumpkin is also a fruit.
We have no idea what mauve is.

--

If it itches, it will be scratched. We do that.

--

If we ask what is wrong and you say "nothing," we will act like nothing's wrong. We know you are lying, but it is just not worth the hassle.

--

If you ask a question you don't want an answer to, expect an answer you don't want to hear.

--

When we have to go somewhere, absolutely anything you wear is fine, Really.

You have enough clothes.
You have too many shoes.


--

I am in shape. Round is a shape.

--

காலம் தான் எவ்வளவு வேகமா ஓடுது. இதை முதலில் ‘பூனையாகக் கூட இல்லாமல் போன சோகங்களில்’ எழுதிய காலம் நினைவில் வருகிறது. ஜஸ்ட் ஃபார் ஃபன்.

Thursday, December 06, 2012

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி

“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...”

வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்தத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டார். பாளயக்கார நாயுடுங்கிற வகையறா கெஜட்டில் இல்லை, என்று சொந்தக்கார மாமா ஒருத்தருக்கு பொண்ணு பார்க்கப்போன இடத்தில் சமாதானம் செய்ய வந்தவர்.

மாயூரம் என்று சொல்லப்பட்ட மயிலாடுதுறையில் இருந்து இரண்டு மூன்று மணிநேர பயணத்தில் கண்ணங்குடி என்று சொல்லப்பட்ட எங்கள் கிராமத்திற்கு வந்துவிடலாம். அந்த கிராமத்தில் மொத்தம் பெரிய பண்ணை, சின்ன பண்ணைன்னு இரண்டு பங்காளிக் குடும்பங்கள், பிறகு அவர்களது சொந்தக்காரர்கள் அவ்வளவுதான். அந்தக் காலத்து மச்சுவீடு எங்களுடையது, இரண்டு பக்கம் திண்ணை வைச்சு, வாசலைத் தாண்டினா நாலுபக்கம் தாழ்வாரம் அதற்கடுத்து இடது பக்கம் கூடம் வலது பக்கம் பத்து ஆளு புலங்குகிற அளவிற்கு பெரிய சமையற்கட்டென்று நல்ல பெரிய வீடு பெரிய பண்ணையென்று சொல்லப்பட்ட எங்கவீடு.

முன்பக்கம் திண்ணையிலும் தாத்தாவின் விருப்பத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட மணிப்புறாக்கள் நிறைந்திருக்கும். பக், பக், பக் என்று ஒரு பக்க மீசையை நீவி விட்டுக்கொண்டு இன்னொரு கையால் அவர் அந்தப் புறாக்களுக்கு பொரி தூவும் அழகே அழகு. வீட்டு பாதுகாவலர்களாக ராஜபாளயத்து வஸ்தாதுகள் இரண்டு தாத்தாவின் முறுக்கிவிட்ட மீசையைப்போல வேறெதற்கும் உபயோகமில்லாமல் வெறும் பெருமைக்காக. அவ்வாவின் செல்லங்களாக மணப்பாறை வகையறாக்கள், ஆடு, கோழி இன்னபிற வீட்டின் பின்புறத்தில், பெரிய காடாய் மூங்கில் மரங்களும், பனை மரங்களும், புளிய மரங்களும் ஒன்றுடன் ஒன்று எங்கள் குடும்பத்தைப் பற்றிய கிசுகிசுக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் எப்பொழுதும் சப்தமாக இருக்கும், கொஞ்சம் உற்றுக்கேட்டால் ஒரு கிலோமீட்டருக்கப்பால் கடல் ஆர்ப்பரிக்கும் சப்தம் கூட கேட்கும்.

இவர்களெல்லாம் ஆந்திரத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து அங்கிருந்த கரிசல் நிலங்களை விளைநிலங்களாக மாற்றி தங்கள் வாழ்க்கையை அங்கிருந்த மண்ணுடனும் மனிதர்களுடனும் உருவாக்கிக் கொண்டவர்கள், கொஞ்சமேக் கொஞ்சமாக இன்னும் தெலுங்கு வாடை அடிக்கும் அந்தக் குடும்பங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியிருந்தக் காலம் உண்டு. பின்னர் வானம் பார்த்த பூமி பொய்த்துப்போய், சவூத் ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும் பிழைக்கப்போன மக்கள் பெரும் செல்வத்துடன் வந்து இங்கிருந்த மற்ற விவசாய மக்களையும் கெடுத்து விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த அவ்வா,

“டேய் குஞ்சான் அந்தக் காலத்தில தெலுங்கானாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தப்ப உங்க தாத்தாமாருங்கல்லாம் பெரிய பணக்காரங்க அவங்க கொண்டு வரும் சொத்தைப் பறிக்கிறதுக்காகக் கொள்ளைக்காரங்க வழிமறிப்பாங்களாம். அவங்கக்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுக்காக வழியில் பணம் நகையெல்லாம் மண்ணில் புதைச்சு வைத்து அடையாளத்திற்கு மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு வந்திருவாங்களாம். அந்த பணமெல்லாம் இருந்தா இந்த மெட்ராஸ் மெட்ராஸ்னு சொல்றாங்களே அதையே விலைக்கு வாங்கலாம் தெரியுமா?”

சொன்ன அன்றிரவு நான் மரங்களின் கீழிருந்த செல்வங்களையெல்லாம் எடுத்து மெட்ராஸை விலைக்கு வாங்குவதாக கனவுகண்டு கொண்டிருந்தேன். பாட்டிக்கு தன் மாமனாரோட பேரைச் சொல்வதில் என் குஷியிருக்குமோத் தெரியாது, எப்பப்பாரு குஞ்சான், குஞ்சாநாக்யருன்னு தான் கூப்பிடும். நான் அது என்னோட பேரில்லைன்னு சொன்னாலும் கேட்பதில்லைன்னு வைத்திருந்தது, தாத்தா இருந்த காலத்தில் அவ்வா தாத்தாவிடம் பேசி நான் கேட்டது கிடையாது.

“டேய் பொடியா நான் சொன்னேன்னு அவ்வாக்கிட்டப் போய் காபித்தண்ணி வாங்கியாடா.” அந்த மீசைக் கிழம் சொன்னது என் காதில் விழுந்திருக்குமோ என்னமோத் தெரியாது அவ்வாவின் காதில் விழுந்திருக்கும். ஐந்து நிமிடத்தில் குவளையில் காபித்தண்ணி என் கரங்களினால் தாத்தாவிற்கு அனுப்பப்படும். தாத்தா சாவுறவரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு அவ்வா, தாத்தா செத்ததுக்கப்புறம் நாட்டாமையை எங்கம்மா பேருக்கும் மாத்தி எழுதிவைச்சிட்டு நான் வாழ்ந்தது அந்த மீசைக்காரனகுக்காகத்தான் உங்களுக்காகயில்லைன்னு சொல்றமாதிரி கொஞ்ச காலத்தில் அதுவும் செத்துப் போச்சு, அன்னைலேரந்து அம்மாவோட அதிகாரம் தான் பண்ணையில் கொடிகட்டி பறந்தது தெய்வநாயகி என்ற ஆட்டக்காரியை நைனா வீட்டிற்கு கூட்டி வந்த நாள்வரை.

அப்ப எனக்கு ஒன்பது வயசிருக்கும். நைனா அரசியல்ல சேர்ந்த நேரம் அது எப்பப்பார்த்தாலும் வீட்டில் தங்காம புல்லட்டில் கட்சிக் கொடிகட்டிக்கிட்டு, இளையாங்குடி, முப்பேத்தங்குடி, செல்லலூர்னு பக்கத்துக் கிராமத்து ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருந்த காலம் அது. அட நம்ப பண்ணையே சொல்லுதுன்னு சொல்லி ஊர் ஊரா அந்தக் கட்சியில சேர்ந்துக்கிட்டிருந்தாங்க, நைனாவும் இந்த தடவை கொஞ்சம் முயற்சி பண்ணினா சீட்டு வாங்கிரலாம்னு நினைத்தார். நைனாவுக்கு ஐம்பது வயசிருக்கும்னு நினைக்கிறேன், அம்மாவிற்கு நாற்பத்தைந்து வயசான காலம். மூத்தவன் மாயூரம் ஏவிசியில் படிக்கப் போயிருந்தான், இரண்டாவது நானு, மூணாவது என் தங்கச்சி பேபி. பேரென்னமோ அகிலாண்டேஸ்வரிதான் ஆனால் எல்லாரும் பேபின்னு கூப்பிடுவதே பழக்கமாயிடுச்சு.

அந்த சின்ன வயதில் புரியவில்லை ஏன் நைனா வீட்டின் எதிர்ப்பக்கம் இருந்த தானியக்கிடங்கை சுத்தப்படுத்தி யாரோ ஒருவரை தங்க வைக்கிறார் என்று, ஐம்பதுகளிலும் அவர் தன் பண்ணைத்தனத்தை நிரூபிக்கும் ஆசையிலும், நாற்பத்தைந்துகளில் அம்மாவினால் அவர் இழுப்பிற்கு ஆடமுடியாததும் கூட காரணமாயிருந்திருக்கலாம் என்று இன்று நான் நினைக்கிறேன். அம்மாவின் நாட்டாமைத்தனத்தில் தெய்வநாயகியின் தலையீடு சுத்தமாக இல்லாத பொழுதும் தன் கட்டிலை பங்கு போட வந்துவிட்டதாலேயே அம்மாவின் கோபம் தலைக்கேறியிருந்த நாட்கள் அவை. எந்நேரமும் வீட்டில் சண்டை தான், எங்கள் வீட்டில் படுக்கையில்லாவிட்டாலும் சாப்பாடு இந்த வீட்டில் தான் என்பதால் நைனா சாப்பிட வரும் நேரத்தில் அம்மா தன் அத்தனை சாமர்த்தியத்தையும் காட்டி அப்பாவை கோபப்படவைப்பார். பெண்டாட்டியின் மீது கைநீட்டும் பழக்கம் இல்லாததால் பல இரவுகள் தட்டு விசிறியடிக்கப்படும் அதிகபட்சமாக.

இந்தக் காலகட்டத்தில் அப்பாவும் அண்ணாவும் ஏன் சந்தித்துக் கொள்ளவேயில்லை என்பது சிறுவயதில் நான் எப்போதும் யோசித்துக் கொண்டேயிருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. என்னைப் போலில்லாமல் அண்ணன் கல்லலூரியில் படித்துவந்ததால் அவன் நேராய் சில கேள்விகளைக் கேட்டுவிட முடியும் என்பதால் நைனாவும், நைனாக்களை கேள்வி கேட்கும் பழக்கம் பரம்பரையிலேயே இல்லாததால் அண்ணாவும் ஒருவரிடம் ஒருவர் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் எனக்குத்தான் கொண்டாட்டம், இரண்டு வீடுகளில் சாப்பாடு, கேட்ட பொழுதெல்லாம் தீனி என சந்தோஷமாயிருந்தேன் அதற்கு ஒரு காரணமிருக்கிறது.

நான், அண்ணா பேபி ஓடிவிளையாடிய வீட்டில் தான் அப்பா அந்த நாட்டியக்காரியை குடிவைத்திருந்தார் என்றாலும் என்னைத்தவிர யாரும் அந்த வீட்டிற்கு வருவது போவது கிடையாது. அண்ணா வயசுதான் இருக்கும் அந்த தெய்வநாயகிக்கு, அதனால் அவன் தலைவைத்துப் பார்க்கவில்லை, தங்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அம்மாவிற்கு எது சரியோ அதுதான் அவளுக்கு சரி அப்படித்தான் சரியில்லாததும். ஆனால் நானோ இரண்டும் கெட்டான் வயதில் இருந்ததால் விஷயத்தை என்னிடம் சொல்லவும் முடியாமல் அதே சமயத்தில் என்னை ஒரேயடியாக இழக்கவும் விரும்பமில்லாமல் இருந்ததால் அந்தக் காலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான். அதன் காரணம் பின்னால் தெரிந்தது, தெய்வநாயகி வந்த ஒன்றிரண்டு வருடங்கள் இருந்த சண்டை ஒரேயடியாக குறைந்திருந்த ஒரு வாரம் மட்டும் அம்மா தெய்வாவிற்கு சமைத்து என்மூலம் கொடுத்தனுப்பினாள். பின்னர் நேரடியான சண்டை தெய்வாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் நடந்ததேயில்லை.

பிற்காலங்களில் நான் தெரிந்து கொண்டேன், அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி தெய்வநாயகியின் கர்பப்பையை நீக்கிவிட்டதாகவும் அதனால் இனிமேல் அவளுக்கு தன் பண்ணையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது என்ற விஷயம் உண்மையானதும். அம்மா கொஞ்சம் அடங்கிவிட்டாள் இரவு நேரங்களில் தெய்வாவிற்கு செய்த துரோகத்தினால் குலதெய்வம் அகிலாண்டேஸ்வரி சூலாயுதத்துடன் துரத்துவதாக ஒன்றிரண்டு பூசாரிகளைப் பார்த்து பரிகாரம் செய்து கொண்டதுடன். அந்தக் காலம் இனிமையானது, நான் அந்த வீட்டிற்குப் போவதை அம்மா தடுக்காதக் காலம் இன்னும் சொல்லப்போனால், திருவிழா, தேர் போன்ற காலங்களில் வீட்டில் கரியஞ்சோறு சமைத்தால் தெய்வாவிற்கு நான் தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் தூதன் நான்தான், பெரும்பாலும் தெய்வாவின் வீட்டில்தான் இருப்பேன். அம்மாவைப் போல எப்பொழுது எண்ணை வழியும் முகமாக இல்லாமல் தெய்வா பவுடர் பூசி சிங்கப்பூர் சென்ட் அடித்து, அந்தச் சமயத்தில் நான் இருந்தாள் என்மீதும் அடித்துவிடுவாள், வாசனயாக இருப்பாள். பெரிய நடராஜர் போட்டோ இருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் எனக்கு அந்த கிராமத்தை விட்டு ஏதோ வேறுறொரு உலகிற்கு வந்துவிட்டதாகத் தோன்றும். அம்மாவைப் போலில்லாமல் தெய்வா அவளுடைய பாடல்களுடன் தான் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் மிகவும் சன்னமாகத்தான் பாடுவாள், ஒடிசலான தேகம், கண்ணுக்கு மையெழுதி, ஓரிடத்தில் நிற்காமல் எப்பொழுதும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருப்பவளாயிருந்தாள்.

வீட்டிற்குப் போனால் பிடித்திழுத்து மடியில் உட்கார வைத்து எப்பொழுதும் தயாராகவேயிருக்கும் ஏதாவதொறு பலகாரத்தை ஆசையுடன் ஊட்டிவிடுவாள். எங்கள் வீட்டில் நாங்கள் அம்மாவையோ இல்லை அவ்வாவையோக் கூட தொட்டுப் பேசி பழக்கமில்லாத காரணத்தால் கொஞ்சம் கூச்சமாகயிருக்கும்.

கொஞ்சக் காலத்தில் அந்தக் கூச்சசுபாவம் என்னிலிருந்து அடியோடு போயிருந்தது, நைனாவைப் போலவே நானும் அவளை தெய்வா தெய்வா என்றுதான் கூப்பிடுவேன், அவளுக்கு நான் எப்பொழுதும் ராசய்யாதான், பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் வாங்க ராசய்யா என்று சொல்லி பலகாரம் கொடுத்து, கன்னத்தில் முத்தா வாங்கிக்கொள்வாள். பிற்காலங்களில் எனக்குப் புரிந்தது, அவள் தனக்கே தனக்காய் ஒரு பிள்ளை இனிமேல் பிறக்காது என்பதால் என்னை அவள் பிள்ளையாய் வரித்துக்கொண்டு நான் அம்மாவிடம் மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தன் சாமர்த்தியங்களை பயன்படுத்தி வந்தது. ஏனென்றால் அவளுக்கு இருந்தது மிகச்சில ஆண்டுகாலமே, எனக்கு வைப்பாட்டி, நாட்டியக்காரி, பெண்டாட்டி போன்ற வார்த்தைகளுக்கான வித்தியாசம் தெரிய வருவதற்குள் தன் மீதான ஒரு பாசத்தை கொண்டு வரும் முயற்சிகள்.

அதை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் வலிமை அம்மாவிற்கு இல்லை, ஏனென்றால் அவள் தெய்வாவிற்கு ஒரு தவறைச் செய்திருந்தாள் அதனால் அவளும் என்னை ஓரளவிற்கு தெய்வாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டாள். ஆனால் ஊர்க்காரர்கள் அப்படியில்லையில்லையா.

“என்னடா அய்யாப்பிள்ளை எப்பப்பாரு உங்க சித்தி வீட்டிலேயேத்தான் இருக்கிறியாமே. ம்ஹும்.”

தனியாக அழைத்துக் காதில் “என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா” என்பார்கள்.

“ஆனாலும் உங்கம்மா பாவம்டா இப்பல்லாம் ராத்திரி உங்கப்பா வீடு தங்கறதேயில்லையாம்ல.”

“ஒருநாள் ராத்திரி உங்கப்பா உங்க சித்திக்கு முடியாத நாளில் உங்க வீட்டுக் கதவைத்தட்ட கதவைத் திறக்கவேயில்லையாம்ல.”

இதுபோல் அவரவர்களின் எங்கள் வீட்டின் மீதான கற்பனையை என்மீது திணித்தவாறு இருந்தனர். இதிலிருந்தெல்லாம் நான் தப்பியதற்கு ஒரே காரணம் தெய்வாதான். இரண்டும் கெட்டான் வயதின் இறுதி நாட்கள் அவை, தன் நாட்டியத்திறமை காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை மாலை நேரக் கதைகளாக அவள் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தாள், அவைகள் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி என் இரண்டும் கெட்டான் வயது சந்தேகங்களைத் தீர்ப்பதாகவேயிருக்கும். அவள் என்னுடன் பேசுவதற்கு எந்த நேரத்திலும் தயாராயிருந்தாள் கேள்வி எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதற்கான பதில் அவளிடம் இருந்தது. பெரும்பாலும் அவள் கோபப்பட்டு நான் பார்த்ததேகிடையாது, சிரித்துக்கொண்டே எல்லாக் கேள்விக்களுக்குமான பதிலை எனக்குப் புரியும் வகையில் சொல்ல அவளுக்குத் தெரிந்திருந்தது.

“தெய்வா உன்னைய பின்னின்னு வெளியில் சொன்னா ஏன் எல்லோரும் சிரிக்கிறாங்க...” போன்ற என் கேள்விகளுக்கான பதில் கூட அவளிடம் இருந்தது, எங்கள் பக்கத்தில் சித்தி என்று அழைக்கும் வழமைகிடையாது. அம்மாவின் தங்கை உறவில் வருபவர்களை பின்னி என்றுதான் இன்றும் அழைப்போம்.

நைனா என்ன தான் பண்ணையாராக இருந்தாலும், அரசியல் செய்யத் தெரியாததால் அரசியலில் நன்றாக அடிவாங்கினார். ஆனால் பரம்பரைச் சொத்தை அழித்துவிடும் அளவிற்கு அது போகாமல் இருந்ததற்கு தெய்வா ஒரு காரணம். பொறுமையாகப் பேசி அவருக்கு இந்த அரசியல் நமக்குத் தேவையில்லைன்னு சொல்லத் தெரிஞ்சிருந்தது. நைனாவும் அரசியலை விடுத்து மீண்டும் தான் நன்கறிந்த விவசாயத்தைப் பார்க்கத் தொடங்கினார். இதனால் தங்களுக்கு செலவு செய்யும் வழமையை நைனா நிறுத்திவிட்டதால் கோபமான அம்மாவின் அண்ணன் முறை உறவினர்கள் இதற்கெல்லாம் காரணம் தெய்வாதான் என இல்லாததும் பொல்லாததையும் அம்மாவிடம் வத்தி வைத்தனர்.

அப்பொழுது மீண்டும் தொடங்கியது என் உரிமையைப் பற்றிய போராட்டம் அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் இடையில், தெய்வா வீட்டில் அப்பாவிற்கு கூட அம்மாவைப் பற்றி தவறாகப் பேசும் உரிமை கிடையாது. அதும் என் எதிரில் நைனா ஏதாவது சொல்லிவிட கண்களாலேயே நான் இருப்பதையும் தொடர்ந்து பேசாதீர்கள் என்று தடுப்பதையும் பார்த்திருக்கிறேன். அம்மாவிற்கும் தான் தெய்வாவிற்கு செய்த தீங்கு நினைவில் வந்தாலும் தன் சொத்தில் தன் நாட்டாமையில் தெய்வாவின் பங்கு வந்தவிடவேக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வைப்பாட்டி கூட சொத்தில் பங்கு வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போடமுடியுமென்றும் அல்லது அவள் இறந்தபிறகு தெய்வாவின் உறவினர்கள் அவளுக்கு நானோ இல்லை நைனாவோ கொள்ளி போட்ட சாட்சியத்தை வைத்து சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமென்று புரளியைக் கிளப்பிவிட்டனர். அம்மாவிற்கோ எங்கள் குடும்பச்சொத்து யாருக்கும் போய்ச் சேருவதில் விருப்பம் கிடையாது. அதனால் ஒரு வார்த்தை தெய்வாவிடம் நேரில் கேட்டாள், அது நானோ இல்லை எனது நைனாவோ அவளுக்கு கொள்ளி போடமாட்டார்கள் என்பதைப் பற்றிய ஒன்று.

முதன் முதலில் தெய்வா கோபப்பட்டு பேசி நான் அன்றுதான் பார்த்தேன், கேட்ட அம்மாவை நோக்கி முதலில் கோபமாக ஆரம்பித்தவள் தன் இயலாமையால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தேம்பத் தொடங்கி பின்னர் அழுகையாக அம்மாவின் கால்களைப் பிடித்து உங்கள் சொத்தே வேண்டாம் நான் இவருக்கு வைப்பாட்டியா வந்து என்னத்தக் கண்டேன் கடைசியா கொள்ளி போடறதக்கூட தடுத்துறாதீங்கன்னு சொல்லி அழ. அம்மா ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டாள். ஆனால் அன்றிரவு நைனா தண்ணியடித்துவிட்டு என்னை அழைத்துப் பேசினார். அதுதான் முதன் முறை அம்மா இல்லாத ஒருவரிடம் நைனா தெய்வாவைப் பற்றி பேசியது.

“தம்பி நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியாது. தெய்வா ரொம்ப நல்லவ, அது உனக்குத் தெரியும் உங்கம்மா கடைசி சமயத்தில் ஏதாவது ஒன்னுக்கெடக்க ஒன்னைச் சொல்லி அவளுக்கு கொள்ளி போடுவதைக் கூட இல்லாமல் செய்துவிடுவாள் எனக்காக நீ அதைச் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்ன பொழுது தெய்வாவும் நைனாவும் இந்த விஷயத்தில் அம்மாவை தவறாக புரிந்து கொண்டதாகவே நினைத்தேன். ஆனால்,

நைனா ஒருநாள் அறுபது வயதில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட, அடுத்துவந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தெய்வாவும் கர்பப்பை எடுத்துவிட்டதால் வந்த ஏதோ ஒரு வியாதியில் இறந்துவிட்ட அன்று அம்மா என்னிடம் ‘நீ அவளுக்கு கொள்ளி போட்டா எனக்கு போடமுடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லிவிட, நைனா அத்தனை வருடங்கள் அம்மாவுடன் குப்பைக் கொட்டியதில் அவளை மிகச்சரியாக புரிந்து கொண்டதை நினைத்து நான் சிரிக்க, பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல அவள் என்னைப் பார்த்தாலும் நைனாவிற்காகவும் தெய்வாவிற்காகவும் நான் அவளுக்கு கொள்ளி போட்டு அம்மாவிற்கு கொள்ளி போடும் உரிமையை விட்டுக்கொடுத்தேன்.

ஆனால் கடைசி வரை தெய்வாவை அம்மா என்று அழைத்ததில்லை, வெளியில் சித்தி, பின்னி என்று அழைத்திருந்தாலும் அவள் முன்னிலையில் எப்பொழுதும் தெய்வா என்றே அழைத்து வந்ததை நினைக்கும் பொழுது அவள் உடலுக்கு எரியூட்டும் கணத்தில் மூச்சு முட்டியது. ஆனால் அவளுக்கு அது விருப்பமானதாகத்தான் இருந்ததாகப்பட்டது. கடைசி காலங்களில் அவளுடைய ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றி கேட்டிருக்கிறேன். தயங்காமல் சொல்லியிருக்கிறாள், நோய்வந்து கொள்ளிபோட ஆளில்லாம அநாதைப் பிணமாப் போயிருவேனோன்னு கவலைப்பட்டதாய், கவலைப்படாமல் என்னிடம் சொல்வாள். அம்மாவைப் பற்றி அவளிடம் எப்பொழுதும் ஒரு உயர்ந்த எண்ணம் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. தெய்வா ராசா உங்கப்பா உங்கம்மாவை உபயோகிக்கிற வரைக்கும் உபயோகிச்சிட்டு, அவரோட அன்பும் ஆதரவும் உங்கம்மாவிற்கு தேவையான நாட்களில் கழட்டிவிட்டுட்டார். ம்ம்ம் அதெல்லாம் ஆம்பளைப் புள்ளைங்களுக்குப் புரியாது, சொல்லியது நினைவில் வந்தது. ஆனாலும் கடைசிவரை அம்மா தன் கருத்தில் மாறாமலேயிருந்ததால் அண்ணா சுடுகாட்டிற்குக்கூட வரவில்லை. அம்மா வீட்டில் அழுததாக பேபி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். தெய்வா இல்லாத அந்த வீட்டை, அந்த கிராமத்தை ரசிக்கமுடியாமல் நான் கால்போன போக்கில் நடந்து இனிமேல் அந்தக் கிராமத்திற்கே வருவதில்லை என்ற எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன்.

PS: படமும் நான் வரைந்ததுதான்.