In குறுந்தொகை

குறுந்தொகை - இளமையின் அழகு உச்சத்தில் மயங்கினான்

கணைக் கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்ந் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணங்குக - தோழி!
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

காதற் பரத்தை தலைமட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.

- மாங்குடி மருதனார்.

நான் புரிந்து கொண்டது:

தன்னைப் பிரிந்த சென்ற தலைவனை நினைத்து வருந்திய தலைவி, தலைவனை தன்னிடம் இருந்து பிரித்த பரத்தையைப் பற்றித் தவறாகப் பேசினாள். இதைக் கேள்விப்பட்ட பரத்தை, வாளைமீன் ஒன்று நிறை மாதமாய் சூள் கொண்டிருக்கும் பொழுது துள்ளித் தாவி சாப்பிட இயலாமல் தானாய் வளைந்து கிடைக்கும் மாமரக் கிளையில் பழுத்து நீரில் கிடக்கும் மாங்கனியை உண்பதைப் போல இளமையில் அழகின் உச்சத்தில் இருக்கும் என்னை நானாய்ச் சென்று தலைவனை மயக்காமல் என் அழகில் மயங்கி அவனாய் வந்து தான் சேர்ந்து கொண்டான். அது தெரியாமல் நான் தலைவனை மயக்கினேன் என்று தலைவி நினைத்தது உண்மையானால் கடல் தெய்வம் என்னை பழிதீர்த்துக் கொள்ளட்டும் என்றாள்.பொருள்:

தோழி, திரண்ட கொம்பினையுடைய வாளைமீனின், நிறைந்த சூலினைக் கொண்ட இளைய பெட்டை, கொத்தாக உள்ள தேமாவின் இனிய கனிகளைப் பற்றிக் கொள்ளும். மனையாட்டி, அறியாமையால் புலத்தற்குக் காரணமாகும் அத்தன்மையுடையேமாகத் தலைவன் திறந்து யாங்கள் ஆயினோம் என்றால், இத்தகைய வளம் பொருந்திய பழமையாய், அறிவுச் சுற்றத்தால் முதிர்ந்த வேலிர் குலத்திற்கு உரியவர்களின் குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள குளிர்ந்த பெரிய கடல் எம்மை வருத்துக.

விளக்கம்:

குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள கடல், கீழ்க்கடலைக் குறிப்பதாகும் தேமாவின் கனி, நீர் நிலையில் உதிர்ந்த கனியன்று, நீரில் படியும் கிளைகளில் பழுத்த கனி ஈண்டு குறிக்கப்பட்டது.

வாளை மீனின் தலையீற்றுப் பெடை ஆதலின், நீரில் பல இடங்களிலும் விரைந்து சென்று, இரை தேட இயலாமை உணர்த்தப்பட்டது. இருக்கும் இடத்திலேயே வளமான, இனிய, கொத்தோடு விளங்கும் மாங்கனி, வாளையின் மடநாகு முயற்சி ஏதுமின்றிப் பற்றிக் கொள்வதற்கு ஏற்ப, நீரில் தோய்வதாய்க் கிடந்தது. தலைவனும், தானே வலியச் சென்ற தங்களை நுகர்ந்தானேயன்றி, தாங்கள் அவனை மனையாட்டியிடமிருந்து, அவள் கூறுவதுபோல் நயப்பித்துப் புறம் போகாதவாறு பிரித்திலம் என்றாள். மனையாட்டி, உண்மை அறியாமல் தம்மீது குறை கூறிப் புலந்தனள் என்றும், யாம் அத்தகையேம் ஆயின், அத்தவற்றிற்குத் தண்டமாகக் கடல் தெய்வத்தால் ஒறுக்கப்படுவேம் ஆகுக என்றும் பரத்தை சூள் உரைத்தனள்.

மனையோள் என்ற சொல், பரத்தை தலைவனின் மனைக்குரியளாம் பேறு பெறாமை குறித்தது. ‘வாளை மடநாகு’ எனப் பரத்தை குறிப்பிடுதல், தலைவன் நுகர்தற்கு ஏற்ற இளமை நலம் வாய்க்கப்பெற்றமை கருதியாகும். இல்லறக் கடமைகளுக்கு மட்டும் உரியளாம் தன்மை பெற்ற தலைவி, ’மனையோள்’ எனப் பரத்தையால் இகழ்ந்துரைக்கப்பட்டனள். மனையோள் என்ற சொல், புறத்தில் நிகழ்வது அறியும் வாய்ப்பு இல்லாதவள் மனைவி எனக்குறிப்பதாகும். தீது நீங்கக் கடலாடும் மரபு ஈண்டுக் குறிக்கப்பட்டது.

சொற்பொருள்:

நாகு : இளைமை குறித்த சொல்
கணைக்கோடு - திரண்ட கொம்பு, செதிலைக் குறித்தது.
கமஞ்சூல் - நிறைந்த சூல், முதற் சூல்
தேக்கொக்கு - இனிய மா; மாவினுள் ஒரு சாதி - தேமா
துணர் - கொத்து
பவ்வம் - கடல்
அனையேம் - அத்தகையேம் - நெஞ்சறி கட்டு
அணங்குக - வருத்துக

மேற்கோள்:

1. “நீடிய மரத்த கொடுநோய் மலிர் நிறை” குறுந்தொகை 99
2. “பைந்துணர், நெடு மரக் கொக்கின் நறுவடி” பெரும்பாணாற்றுப்படை 308-309
3. “தொன்று முதிர் வேளிர் குன்றூர்” நற்றிணை 280
4. “அணங்குடை முந்நீர்” அகநானூறு 207
4. “உருகெழு தெய்வம், புனை இருங்கதுப்பின் நீ வெய்யோள் வயின் அனையேன் ஆயின் அணங்குக என் என” அகநானூறு 166
6. “அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம்பாடு ஆதல் அதனினும் அரிதே” நற்றிணை 330
7. “கழனி மாஅத்து விளைந்து உகுதீம்பழம் பழன வாளை கதூஉம்” குறுந்தொகை 6

பொருள் முடிவு:

தோழி மனையோள் புலக்கும், மகிழ்நற்கு அனையேம் ஆயினம் எனின் பவ்வம் அணங்குக. 

முனைவர் வி. நாகராசன் உரை

நானா காரணம்?

தோழி!
வாளைமீன்கள் பழங்களைக் கவ்வும்
வேளிர்குன்றத்தின்
கிழக்கே உள்ள கடல்
என்னைக் கொள்ளட்டும்.
அறியாமையால் அவர் மனைவிக்கு
என்னால் புலம்பல்
ஏற்பட்டதென்றால்.

சுஜாதா - மருதம் _ காதற் பரத்தை கூற்று

Related Articles

0 comments: