In நாட்குறிப்பு

மரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்

என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் பெரிய இழப்பை மரணம் அளித்ததில்லை, ஆனால் மரணத்தைப் பற்றிய பயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நின்றிருக்கின்றன, முதல் முறையாக ஒரு மரணம் உன்னை எப்படி பாதிக்கும் தெரியுமா என்ற கேள்வி அளித்த கொடூரம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. என் அப்பா "நாளைக்கு நான் இறந்து போனால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்வியை என்னிடம் கேட்ட பொழுது எனக்கு என்ன வயது என்று தெரியாது, ஆனால் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி என் மீது வீசப்பட்டிருக்கிறது. மரணம் கொடுக்கும் இல்லாமையைப் பற்றி சிந்திக்கக் கூடத் தெரியாத நாட்களிலேயே இந்தக் கேள்விக்கான விடையை யோசித்திருக்கிறேன்.
 
நெருக்கமான சொந்தங்களில் நண்பர்களில் மரணம் இதுவரை சம்பவித்ததேயில்லை, எனக்குத் தெரிந்து இறந்து போனது என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் தான். சாமியாராய்த் திரிந்த என் தாத்தாவின் மரணம் பற்றிய செய்தி தான் கிடைத்தது, நீண்ட நெடிய உருவம் இடுப்பு வரை நீளும் தாடியுடனும் பிருஷ்டத்தைத் தொடும் தலைமுடியுடன் இருந்தவரை அவ்வளவு பழக்கம் கிடையாது. இந்திய-இங்கிலாந்து விமானப்படையில் இருந்ததாகவும் பிறகு காது கேட்காததால் விமானப்படையின் கனரக ஓட்டுனராக சில காலம் இருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கங்கே சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், அவருடைய பெயர் தான் எனக்கு வைத்திருந்தார்கள் "பவானிதாஸ்" இன்னும் தாஸ் என்ற அளவிலும் என் மாமா சித்தியின் மூலமாகவும் அவருடைய பெயரின் இருப்பு இருக்கிறது. அதுதான் முதன்முதலில் சந்தித்த மரணமாயிருக்கும். சின்னவயது ஒன்றும் தெரியாத காலத்தில் நடந்தது.
 
அப்பாவின் அம்மாவிற்கு என் மீது கொள்ளைப் பிரியம், குழந்தையாக என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டு அம்மா டீச்சர்ஸ் டிரெயிங் சென்றுவிட்டார் என்று தெரியும். என்னை சிறிது காலம் வளர்த்தது அவர்தான். கொஞ்சம் மனநலம் பிறழ்ந்து அவர் என் வீட்டின் ஒரு அறையில் இருந்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அவர் இறந்த பிறகு கூட அம்மா அந்த அறையை உபயோகப்படுத்த மாட்டார். என்னமோ இன்னமுமே கூட அந்த அறையைப் பற்றிய நினைப்பு சட்டென்று 'பாச்சம்மா' பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வருகிறது. அவருக்கு வெத்தலைப் பாக்கு சீவல் புகையிலை வாங்க அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயில் கமிஷன் அடித்து ஐம்பது காசுக்கு வாங்கிக் தின்று விட்டு 1.30 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவிற்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் பாச்சம்மா அப்பாவிடம் போட்டுக்கொடுத்து எனக்குத் தெரியாது. அக்காவுடனான என் சண்டைகளில் அப்பாவும் அம்மாவுமே கூட அக்கா பக்கம் பேச அவர் மட்டும் என் பக்கம் பேசியது நினைவில் இருக்கிறது. அப்பா தன் தம்பியிடம் அவரை அனுப்பிய சிறிது காலத்தில் எல்லாம் அவர் இறந்துவிட்டார், என் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தால் நான் பட்டிருக்கக்கூடிய வேதனை அப்பொழுது அனுபவிக்கவில்லை.
 
அவ்வளவுதான் மரணம். ஆனால் மரணம் பற்றிய தொடர்ச்சியான கேள்விகள் இருந்ததுண்டு, பொன்னியின் செல்வன் போல், வந்தியத்தேவன் போல், சுஜாதா போல் சாதிக்காமலேயே இறந்துவிடுவேனோ என்ற பயம் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. மரணம் பற்றிய கேள்விகள் இயல்பாய் எழுப்பும், மரணத்திற்குப் பின் யாருக்கு என்னைத் தெரியும் உலகத்திற்கு என் நினைவு எப்படி வரும் உலகில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியும் போன்ற கேள்விகள். அந்தச் சமயம் பார்த்த கடவுள் படங்கள் நினைவில், அசுரனாக என்னையே நினைத்துக் கொண்டு எப்படி சிக்கலான கேள்வி கேட்டு இறப்பற்ற வாழ்க்கையை கடவுளிடம் யாசிக்கலாம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. எத்தனை இரவுகள் எத்தனை இரவுகள் கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, மரணமற்ற பெருவாழ்வைப் பற்றிய வரத்துடன் நான் இருப்பதைப் போன்ற நினைப்புகள்.
 
பொன்னியின் செல்வன் படித்து, ஆதித்த கரிகாலனின் வாசகமான, இளம் வயதில் சாதித்து இறந்துவிட்டால்  வயதான தோற்றம் மறைக்கப்பட்டு சிறுவயது நபராகவே உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவேன் என்று நினைத்திருக்கிறேன். என் பாட்டியின் நிலையைப் பார்த்து சிறு வயதிலேயே இறந்துவிடும் ஆவல் அதிகமாயிருக்கிறது. இந்தியாவிற்காக உடலெல்லாம் வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு பாகிஸ்தானில் குதிப்பது கொஞ்ச காலக் கனவு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிறு வயது மரணம் தேவைப்படும் புகழ். இந்தியாவிற்கு வேறொரு நாட்டிற்கு வரும் சண்டையில் என்னை தற்கொலைப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு நான் நிற்கும் காட்சிகள் மனக்கண்ணில் இன்றும் ஓடுகிறது. எல்லாம் கடந்து போய் மரணத்தை பற்றிய பயம் தோன்றிய காலமும் உண்டு, அப்பா இறந்திவிட்டால் என்ன செய்வது அடுத்த நாள் வாழ்க்கை எப்படி போகும். அம்மாவின் 1500 ரூபாய் சம்பளத்தில் என்னையும் அக்காவையும் வளர்க்கமுடியுமா? அம்மா அடிக்கடி சொல்லும் உங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டில் கூட போய் நிற்கமுடியாது என்ற வார்த்தைகளைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். பாரதியின் "பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை" என்னை அப்படியே நெருப்பின் அருகில் நிறுத்துவதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.
 
பாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும். டெல்லியில் பெங்களூரில் என இந்த வரிகளை பாரதி எழுதியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை எத்தனையோ தடவை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் ஒருவனைப் பார்த்த உணர்வில் மனம் நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் உட்கார்ந்திருக்கிறேன். அந்த வரிகள் மட்டுமல்ல அச்சமில்லை கவிதையின் அத்தனை வரிகளும் எனக்கு உத்வேகத்தை என் வழியில் தொடரும் இடற்பாடுகளைத் தூக்கியெறிந்து என் பயணத்தை தொடர உதவியிருக்கின்றன.
 
அப்பா தன்னுடைய இம்பார்ட்டன்ஸைக் காட்டுவதற்காகக் கேட்ட அன்றைய கேள்வி இன்றுவரை தொடர்கிறது ஆனால் அந்தக் கேள்வி என்னை அணுகும் முறை வித்தியாசமாய் இருக்கிறது. பல சமயம் நினைத்துக் கொள்வே என் அப்பாவின் மரணம் என்னிடத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று. அந்த பதிலுமே கூட காலத்தின் ஓட்டத்தில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரியான எந்தக் கேள்வியும் என் அம்மாவைப் பற்றி வந்ததில்லை, நெருப்பென்று சொன்னால் சுட்டுடுமா என்றால் என் அம்மா விஷயத்தில் சுடும் என்று சொல்வேன். அம்மாவிற்கும் அப்பாவிற்குமான கண்ணோட்டத்தில் கூட என்னால் ஒற்றுமையைப் பார்க்க முடியவில்லை. நரை விழுப்போகும் அம்மாவைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத காலங்கள் எல்லாம் என் வாழ்வில் உண்டு.
 
எத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை. சில சமயங்களில் நமது தைரியங்களுக்குப் பின்னால் தான் பயம் மறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு என் மரணம் நிகழ்ந்தால் என் வீட்டில் நடைபெறப்போகிற மாற்றங்களைப் பற்றி அலுவலகத்தின் நான் மட்டும் வேலை பார்க்கும் சில இரவுப் பொழுதுகளில் யோசித்துக் கொண்டிருப்பேன். கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய்.
 
அப்பாவிடம் நேற்று எப்ப பெங்களூர் வரீங்க நான் காஷ்மீர் போறேனே என்று கேட்டதற்கு "தம்பி பயமாயிருக்கு போய்த்தான் ஆகணுமா?" என்ற கேள்வி எனக்குள் ஏற்படுத்திய சந்தோஷம் எழுதுவதற்கு அப்பாற்பட்டது. "நைனா நான் காஷ்மீர் போகலை ஜம்முதான் போறேன் அங்க பிரச்சனையே கிடையாது" என் அப்பாவிடம் நாங்கள் யாரும் உண்மை பேசமாட்டோம் ஆனால் அவருக்கு உண்மை தெரியும் எங்கள் வாய்களின் மூலமாய் அவருடைய காதுக்கு உண்மை போகாது. அக்காவிடம் விளையாட்டிற்குச் சொன்ன இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் என்றேன். அக்காவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும் மரணம் என்பது நெருப்பைப் போல பலருக்கு சொன்னாலே சுடும்.

Related Articles

18 comments:

மதுமிதா said...

ஏகாதசியும் அதுவுமா இப்படியெல்லாம் பேசலாமா?
நினைக்க‌வே கூடாதே மோக‌ன்

அலுவ‌ல‌க‌த்துல‌ ஜாக்கிர‌தையா வேலை செஞ்சு, எங்கே போனாலும் பாதுகாப்பா போயிட்டு
ப‌த்திர‌மா வ‌ந்து சேருங்க‌.

சுடுதுய்யா யோசிச்சு எழுதுங்க‌.

மோகன்தாஸ் said...

அக்கா,

என் சொந்த அக்காவை நினைத்துக் கொண்டது போல் கடைசி பாராவை எழுதும் பொழுது உங்களையும் நினைத்துக் கொண்டேன்.

//அலுவ‌ல‌க‌த்துல‌ ஜாக்கிர‌தையா வேலை செஞ்சு, எங்கே போனாலும் பாதுகாப்பா போயிட்டு
ப‌த்திர‌மா வ‌ந்து சேருங்க‌.//

எழுதுவேனே தவிர நானும் ரொம்ப ஜாக்கிரதையான ஆள் தான், கவலைப்படாதீர்கள் உங்களுக்காக இன்னும் கொஞ்சம் கவனமாகயிருக்கிறேன்.

P.A.விக்னேஷ்வரன் said...

//எத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை//

எவ்வளவு பெரிய உண்மை... என்ன சார் இப்படி ஒரு கவலையை கொடுக்கும் பதிவு...

P.A.விக்னேஷ்வரன் said...

மு.வவின் மண் குடிசை படிசிருகிங்கலா? அதுல மரணம் பற்றிய சில குறிப்புகள் இருக்குமே....

சிறில் அலெக்ஸ் said...

Is this s Story or your own experience?

I was confused..

Death is a great subject to reflect upon (Ekathasy or not)

நாகை சிவா said...

நம்மள போலவே யோசிக்கும் ஒரு ஆளு.. சரி தான்...

//இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் என்றேன்.//

இது தான் மேட்டரு. இதையே நான் வேறு விதமாக நம்புகிறேன். அதை நம்பி தான் எவ்வளவு ஆபத்து என்று கூறினாலும் சில இடங்களில் வேலைக்கு சென்றேன். இன்னமும் இருக்கிறேன்.

"God having plans for everyone(thing) "

கிருத்திகா said...

ரொம்ப ஆழமான கட்டுரை.. அதிகம் பதிலுறுக்கக்கூடிய எழுத்து.. ஆனால் இந்த 10 மணி இரவில் தொட்டால் வழக்கம் போல் தொலந்து போவது என் தூக்கமாயிருக்கும்... நாளை வருகி
றேன்.. வாழ்த்துக்கள்.. காஷ்மீர் எப்ப போரீங்க.. சரி முந்தைய பதிவை மீண்டும் படித்து தெரிந்து கொள்கிறேன்..

ILA(a)இளா said...

நெறைய விஷயங்களை கிளப்பி விட்டுட்டியேப்பா. டவுசர் போட்ட காலம் முதல் 21 வயசு வரை ஒன்றாகவே இருந்து திடீரென்று இறந்த போன நண்பன், என் அத்தை மகனின் விபத்து, என் உயிர் தோழியின் தற்கொலை ... என் அப்பாவின் அம்மாவின் மரணம்,...
மரணத்தின் குரல்/பாதிப்பு பல வருஷங்கள் இருக்குமா?

மோகன்தாஸ் said...

விக்னேஷ்வரன்,

படித்ததில்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லைங்க வாழ்க்கையில் மரணமும் ஒரு அத்யாயம் பேசாமல் இருப்பதால் வராமல் இருந்துவிடாதில்லையா :)

சிறில்,

கதை கிடையாது. சிலருக்கு அவரவர்களுடைய நம்பிக்கைகள்ங்க சிறில் அவ்வளவுதான்.

நாகை சிவா,

ஆமாம் அந்த உணர்வு வந்துட்டால் அடுத்த வின்டருக்கு குர்தீஸ்தான் போய்ட்டு வந்திடலாம்.

//"God having plans for everyone(thing) "//

அவர் அப்படி ஒன்று வைத்திருந்தால் எனக்குப் பிரச்சனைகிடையாதுங்க :)

கிருத்திகா,

நான் நாளைக்கு கிளம்புறேன். நீங்க படிச்சிட்டு எழுதுங்க.

இளா,

ஆமாம் மரணமும் நாம் மறந்து போனதாய் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் கொண்டு வந்து கொட்டும் தன்மையுடையதாகத்தான் இருக்க முடியும்.

காட்டாறு said...

ஒவ்வொருவரிம் மரணமும் ஒவ்வொன்று கற்று தரும்.

நீங்கள் போன பதிவில் ரகசியம் பற்றி எழுதியது போல் ரகசியமாய் இருப்பதினால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவமோ?

சிறில் அலெக்ஸ் said...

//Death is a great subject to reflect upon (Ekathasy or not)//

நம்பிக்கையை குறை சொல்லும் வகையில இதை எழுதவில்லை.. அப்படி தோற்றமிருப்பது என் தவறுதான். மன்னிக்கவும்.

உறையூர்காரன் said...

கல்யாணத்துக்கு முன்னால "ஒரே மூச்சு. போனாப் போச்சு" ன்னு நானும் வசனம் பேசிக்கிட்டிருந்தேன். ஆனா இப்ப (பொருளாதார ரீதியாக என் மனைவி என்னை சார்ந்தில்லை என்கிற போதும்) மரணத்தை பற்றிய சராசரி மனிதனுக்கு இருக்கும் பயம் எனக்கும் வந்துவிட்டது. உங்களுக்காய் வாழும் ஒரு உள்ளம் இருந்தால் "வாழ்ந்து காட்டலாம்" என்கிற எண்ணம்தான் மேலோங்கும்.

Swetha said...

தோழரே
பல நாட்களாக படித்து வருகிறேன் உங்கள் பதிவுகளை, இன்றுதான் எனோ மறுமொழி எழுத முயல்கிறேன். உண்மைக் காரணம் இறுதியில்....

முதலில் நெஞ்சை தொட்ட(சுட்ட) உங்கள் வரிகள்

//கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய். //

// எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, 'காலம் உனக்குச் சொல்லித்தரும்' என்ற பதிலில் இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது.//

//'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே!' //

//ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன். //

//பாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும்//

ஹ்ம்ம்ம்,,,.
என்னடா இது நம்ம மாதிரியே ஒருத்தான் யோசிக்கிறானே!

But i just releized ..."Well I guess there are quite a few people think the same way..."


//'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே!' //

என்பதனால் நான் எதனையும் வெளியே சொல்வதில்லை!. நானும் ஒரு பதிவு ஆரம்பித்து அளக்கத்தொடங்கமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். (சோம்பலும் ஒரு மாகாக் காரணம் ?)

Important note: Well I am not saying you are blabbering ;) infact I enjoy your postings,


இன்று நான் பதில் எழுத (நானும் உங்களை மாதிரி பொட்டி தட்டும் வேலை தான் ) (அதுவும் சின்சியர் சிகாமணி ஆகிய நான் வேலை நேரத்தில் எழுதக் காரணம்), இன்று ஒரு நாளும் இல்லா திரு நாளாய் எனது நிறுவன தலைவர், நான் கேட்ட கேள்விக்குப் பாதில் அளிக்காமல் கிட்டத்தட்ட கத்தி விட்டார். (பாவம், அவரிற்கு சில டெட்லைன்). என்ன இது நம்மகிட்டேயேவா என ஒரு Ego! வேலை செய்ய்யாமல் இழுத்தடித்து, அவர் முகம் பார்க்காமல் வேலையாய் இருப்பது போல் பாசாங்கு பண்ணி, இனிமேல் கீழே வேலை பார்ப்பவைகளிடம் எக்காரணம் கொண்டும் கத்தக் கூடாது என முடிவுபண்ணிய சந்தர்ப்பத்தில்:

வெளியே சென்றிருந்த நிறுவன தலைவரிடமி்ருந்து தொலை பேசி அழைப்பு, "X contract is almost got singed and I apology for showing my short temper on you, should have never done that!"

//ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.//

ஹா ஹா...touched me ஆனலும் my dear ego.....

//எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது.//

மறுமொழி இனி ஒருக்கால் இடாவிடினும், அவசியம் உங்கள் பதிவுகளை படித்து வருவேன். உங்கள் எண்ணங்களில் என் எண்ணங்களைப் பார்க்கிறேன். முடிந்தளவு எல்லோருக்கும் நல்லவளாயிருக்கும், முடியாத போது சும்மா இருக்கும் ((being still) to permit the Inner Guide to be heard from mounam)

-சுவேதா (of course nick name)

Anonymous said...

நான் மிகவும் மதிக்கும் ஒருவர் கூறியது: எந்த ஒரு விஷயமும், அறிவுரையும் உங்களுக்கு ஏற்படுத்த முடியாத மாற்றத்தை "நான் அடுத்த் நிமிடத்த்ில் இறந்து விடுவேன்" என்ற எண்ணம் ஏற்படுத்தி விடும். மரணம் ஒரு அற்புதமான கருவி.

Anonymous said...

மோஹந்தாஸ்,

மிகவும் சிந்திக்கவைத்த பதிவு. உங்கள் காஷ்மீர் பயணம் இனிதாக இருக்கட்டும். 'அன்பே வா' மாதிரியான படங்கள் சுட இது ஏற்ற பருவ நிலை இல்லையெனினும் பனி/ஸ்நோ சூழ் காஷ்மீரும் அழகுதான்.

சுஜாதா சிவாஜிக்கு எழுதிய "சாவர(ற?) நாள் தெரிச்ஞ்சிடுச்சுன்னா வாழற நா: நரகமாயிடும்" வசனம் பத்தி என்ன நினைக்கிறீங்க ? அதையே மாத்திப் போட்டு "சாவர(ற) நாள் தெரியாததால வாழற நாள் நரகமாகியிருக்குனு' வாழற பல பேரபத்தி என்ன நினைக்கிறீங்க ?

இன்னும் 10 வருடங்கள் கழித்து நீங்கள் குடும்பவாழ்வில் சுகதுக்கங்களைப் பார்த்தபிறகு இதே பதிவைப் படித்துவிட்டு, அப்போதைய உங்கள் எண்ணத்தையும் பகிர்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
அலெக்ஸ் பாண்டியன்.

vikneshwaran said...

//வாழ்க்கையில் மரணமும் ஒரு அத்யாயம் பேசாமல் இருப்பதால் வராமல் இருந்துவிடாதில்லையா :)//

kandipaga varum... athu terichum manusanukul evalo verupadugal... hrmm.... elorume kavalai ilathe manithargalthan...

கிருத்திகா said...

முழுசும் படிச்சிட்டேன்.. ஆனா பின்னூட்டம் இல்ல அதற்கான வேகமோ தேவையோ இப்ப இல்ல.. அப்ப ஏன் இப்படி ஒரு பின்னூட்டம்.." நாளை வருகி
றேன்" ன்னு சொல்லிட்டேனே.. சொன்ன சொல் காப்பாற்ற வேண்டாமா??? அதற்குத்தான்.. நல்லா ஊர் சுற்றிவிட்டு வாங்க.. வாழ்த்துக்கள்

SurveySan said...

சேகுவாரா 'தம்' அடிக்காத படமா ஒண்ணு எடுத்து போடலாமே? :)