In புத்தகங்கள்

டார்த்தீனியம், லங்காதகனம், பத்மவியூகம் - ஜெயமோகன்

எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற்றவன் என்ற முறையில் தனிப்பட்ட விதத்தில் எனக்கு கலைஞர் மீது பற்று உண்டு. அப்படிப்பட்டவரை ஒரு முறை விகடனில் என்று நினைக்கிறேன் ஜெயமோகன் "இலக்கியவாதி அல்ல" என்று சொல்லப்போய் பிரச்சனை ஆனதில் அறிமுகம் ஆனார். அந்த தனிப்பட்ட பேரின்(ஜெயமோகன்) மீது கோபம் உண்டு; ஏனென்றால் எனக்கு அதற்குப் பிறகும் கூட ஜெயமோகனின் எழுத்து அறிமுகமாகவில்லை.

மரத்தடியில் சேர்ந்த பொழுது எல்லா ஆர்ட்டிக்கிள்களையும் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய ஆர்வம் இருந்து. மீனாக்ஸின் கதைகள், நண்பனின் கவிதைகள், மீரானின் நக்கல் தொனிக்கும் எழுத்து, பிரசன்னாவின் கவிதைகள் என ஏகப்பட்ட விஷயங்கள் அறிமுகமான பொழுதில் தான் ஜெயமோகனின் பதில்களைப் படித்தேன் மரத்தடியில். அதுவரை இல்லாத ஆர்வமாய் அந்த நீண்ண்ட்ட பதில்களை சீக்கிரமாகவே படித்து முடித்தேன். அங்கேயே பிடித்துப் போனது அவருடைய நடை. பின்னர் "நிழல்கள்" பிரசன்னாவை மரத்தடியில் ஜெயமோகனின் பெயர் சொல்லி வம்பிழுக்கப்போய் சரி புத்தகமாய் வாங்கிப் படிப்போம் என்று தான் ஆரம்பித்தேன்.

எனக்கு இப்படியாய் முதன் முதலில் அறிமுகமான ஜெயமோகனின் புத்தகம் "ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு" உயிர்மை பதிப்பகம். இந்தச் சமயத்தில் எல்லாம் ஒரு மாதிரி இலக்கியத் தரமுள்ள புத்தகங்களின் அறிமுகம் வந்திருந்தது. ஆனால் புத்தகமாய் இதுதான் முதலாவது ஜெயமோகனுடையது ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏகமாய் ஏகமாய் திண்ணை, மரத்தடி மற்றும் வேறு இடங்களிலும் படித்திருந்தேன். சரி இனி புத்தகத்திற்கு.

இந்தப் புத்தகத்தில் மொத்தம், "கிளிக்காலம்" "பூமியின் முத்திரைகள்" "மடம்" "பரிணாமம்" "லங்கா தகனம்" "அம்மன் மரம்" "டார்த்தீனியம்" "மண்" "நிழலாட்டம்" "பத்ம வியூகம்" "இறுதி விஷம்" என பதினோறு குறுநாவல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பற்றிய என்னுடைய "2 Cent" எழுதணும் போலிருந்தாலும். படிப்பவர்களையும் மனதில் நினைத்துக் கொண்டு(இதுதான் முதன் முறைன்னு வேணும்னாலும் நினைச்சிக்கலாம் - நன்றி சென்ஷி) மூன்று நான்கை மட்டும் தொட்டுச் செல்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் "என் சொற்களில்" ஜெ.மோ சொல்வது போல், "...நாவலுக்குரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்குரிய கூர்மையையும் அடைந்த இலக்கிய வடிவம். நல்ல குறுநாவலில் சிறுகதைக்குரிய இறுதிமுடிச்சும் சிறப்புற நிகழ்ந்திருக்க்கும்..." நீங்கள் புத்தகத்தில் உள்ள குறுநாவல்களைப் படித்து முடித்துவிட்டு வந்ததும் உங்களால் இதை நிச்சயமாய் உணரமுடியும். அவரே சொன்னது போல் "மண்" நிச்சயமாய் குறுநாவலுக்குரிய சிறப்பான இலக்கண அமைதி கூடிய ஆக்கம் தான்.

முதலில் "டார்த்தீனியம்" ஒரு நல்ல நாவலைப் படித்தால் அதிலேயே ஆழ்ந்துவிடவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள் டார்த்தீனியம் படித்துப் பாருங்கள், உங்கள் அறைகள் கருமையாவதைப் போலவும் உங்களைச் சுற்றி கருநாகப் பாம்புகள் தாண்டவமாடுவதைப் போலவும் உணர்வீர்கள். மேஜிக் ஷோ பார்ப்பதைப் பற்றி எனக்கு இன்னமும் தெளிவான அறிவு கிடையாது, கண்களைக் கட்டுவார்கள் என்று சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதை படித்த பொழுது அப்படித்தான் உணர்ந்தேன்; மக்ரூணி, கனகு, கருப்பன் என விலங்கினங்கள் இறக்கும் என்னவோ நாம் வளர்த்தவைகள் நிஜமாகவே இறந்துவிட்டால் வரும் வேதனையைப் போல் உணர்ந்தேன். இந்த மேஜிக்கல் ரியலிஸிகக் கதை நிற்கவிடாமல் ஓட ஓட என்னைப் படிக்க வைத்தது. ஒரு கதையைப் படித்துவிட்டு என்னமோ 1500 மீட்டர் ஓடியதைப் போல் களைப்படைந்தேன். சொல்லப்போனால் இவை நம்புவதற்கு கடினமாகயிருந்தாலும் உண்மை என்னவோ அதற்குப் பிறகு அந்த டார்த்தீனியம் கதை பக்கம் கூட போக மனம் பயப்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிக அற்புதமான கதை, இது போன்ற ஒரு உண்மையாய் இருக்க முடியாத கதையைச் சொல்லும் பொழுது என்னைப் போன்ற ஒருவனை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்வதென்பது அவரால் முடிந்திருக்கிறது. இன்றைக்கு ரிவ்யூ எழுத புரட்டிய பொழுதும் என்னால் ஒரு ஆறுமாத காலத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறமுடிகிறது.

அடுத்தது, லங்கா தகனம் (இதைப் பற்றி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் இந்தக் கதை படித்த பொழுது என்னவோ எஸ்.ராவின் ஒரு குறுநாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு இருந்தது.) ஆனந்தன் என்ற கதகளி ஆட்டக் காரரைப் பற்றிய கதை, சின்ன வயதில் நல்ல ஆசிரியர்களிடம் கதகளி படித்து பாண்டியத்துவம் பெற்றவர். கதகளிக்கான உண்மையான மதிப்பும் மரியாதையும் இப்பொழுது இல்லை என வருத்தப் படுபவர். அவருடைய மிகவும் தேர்ந்த பயிற்சியான "லங்கா தகனத்தை" பூரணமாக ஆடிவிடவேண்டும் என்று நினைப்பவர் அவர். பூரணம் என்றால் முக்தி என்று பொருள் முற்றுப் புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புவது இல்லை.

என்னால் ஆனவரை இந்த விஷயத்தை புரியவைக்க முயல்கிறேன்.

"கதகளி தெய்வீகமான ஆட்டம். ஆடி ஆடி மனித உடம்பிலேயே பஞ்ச பூதங்களின் அத்தனை அசைவுகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். நீரின் சுழிப்பு, நதியின் வேகம், கடலலைகளின் எழுச்சி, தீயின் தகதகப்பு, இடி மின்னல் உக்கிரம், மரங்களின் அசைவு, மிருகங்களின் பாய்ச்சல்... சலன வடிவான்ன அன்னமய்யோகத்தின் அடிப்படைச் சாரம் முழுக்க மனிதனின் உடம்பின் அசைவால்ல் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச சக்திகளின் மீட்டலுக்கு மனித உடம்பு விட்டுத்தரப்படுகிறது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு மூர்த்தி உண்டு. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் அதற்குரிய மூர்த்தி உண்டு. நாம் மூர்த்திகளின் வேடம் போட்டு ஆடுகிறோம். அப்போது அம்மூர்த்தியின் சான்னியத்தியம் மேடையில் வருகிறது. மனம் தொட்டு ஆடினவர்களுக்குத் தெரியும் நான் சொல்வது..."

"உண்மை" என்றார் ஒருவர்.. "நானே பலமுறை அந்தமாதிரி உணர்ந்திருக்கிறேன்."

"ஆனால் மேடையில் கண்காணாதபடி நம்முடன் இருக்கும் மூர்த்திக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு தூரம் இருக்கிறது அதுதான் நம் சுய ஞாபகம். நான் யார், நான் பாலேடாத்து குட்டப்பன் பிள்ளை, ஆளூர் அச்சன் மடத்தில் ராவண வேஷம் போட்டு ஆடுகிறேன் என்கிற ஒரு உள் ஞாபகம். இது நடிப்பு இது நடிப்பு என்று நம் உள்மனம் சொல்லியபடியே இருக்கும் நிலை. எத்தனை ரௌத்திரமாக ஆடினாலும், கருணைரசத்தில் மெய்மறந்து உருகினாலும், இந்த சுய உணர்வின் ஒரு சொட்டு நமக்குள் எப்போது இருக்கிறது. அது ஏன்?"

"ஆட்டக்குறை" என்றார் ராமன் பிள்ளை.

"அதே தான். ஒருபோதும் நம் ஆட்டம் பூரண வடிவம் பெறுவது இல்லை. அடவுகளில் ஒரு மயிரிழையளவு தாளம் தவறுகிறது. முத்திரையில் ஒரு தளிரின், ஒரு ரோமத்தின் அசைவளவிற்கு லயம் தவறுகிறது. உடல் சொல்வதைக் கண் சொல்ல ஒரு வினாடி பிந்திவிடுகிறது. கண்ணும் உடலும் சொல்வதுடன் மனம் ஒன்ற ஒரு சிறு ஞாபகம் தடையாக இருந்துவிடுகிறது. ஆட்டக்குறை தீர்ந்த ஆட்டம் அனேகமாக எவருக்கும் சாத்தியமாவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு அது சாத்தியமாகிறது. அது ஒரு வரம். ஒரு பெரிய சாபமும் கூட. காரணம், பூரணம் என்றால் முக்தி என்று பொருள்; முற்றுப்புள்ளி என்று பொருள். பிறகு பின் திரும்புதல் இல்லை...
"

இதுதான் மேட்டர், ஆனந்தனுக்கு ஆட்டக்குறை இல்லாமல் ஒரு முறை "லங்கா தகனம்" ஆடிவிட வேண்டும் என்றும் அப்படியே அனுமனிடம் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்பதும் ஆசை.

இப்படிப்பட்ட ஒருவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றிய வரிகள் நம் கண்களில் தண்ணீரை வரவழைக்கின்றன.

"...ஆசானும் சிரிப்பு ஏற்படுத்துபவராகவே இருந்தார். பொதுவாக மைதானத்தில் விடப்பட்ட எலி போல ஒரு தத்தளிப்பு அவரிடம் இருந்தது. கைகளைக் கட்டியபடி, முகம் கலங்கியிருக்க, உதடுகள் சிரிக்க அவர்களை அணுகினார்.

"யார் இவர்?" என்றார் ஒல்லியான வழுக்கைத்தலை ஆள்.

"நடிகன்" என்றார் தம்புரான். "நன்றாகக் கதகளி ஆடுவான். நம்முடைய மடத்தச் சார்ந்து இருக்கிறான். அவனாஇ உற்றுப் பாருங்கள், அவனுடைய வேடிக்கையான உடல் அசைவுகளை டேய் ஆசானே, எங்கே போய் அந்தச் செம்பை எடுத்துவா பார்ப்போம்..."

ஆசான் சட்டென்று என்னைப் பார்த்தார். பிறகு சங்கடமாக நடந்து போனார். அவருடைய நளினமான காலசைவும், தோள்களின் சங்கடமான ஒடுக்கமூம் இணைந்து விபரீதமான ஒரு விளைவு ஏற்பட்டது. குண்டான கண்ணாடிக்காரர் "பர்ர்ர்" என்று சிரித்துவிட்டார். ஆசான் செம்பைக் கையில் தாமரை போலவோ, நெருப்புக் குண்டம் போலவோ, ஏந்தியபடி வந்து நின்று தயங்கினார். தம்புரானும் மற்றவர்களூம் சிரிக்க காரியஸ்தனும் சிரிப்பை அடக்கியபடி "போய் திரும்ப அங்கேயே வையும் அதை ஆசானே" என்றார். ஆசான் அதைத் திரும்ப வைத்த பின்பு வந்து, தூனோரமாக ஒதுங்கி நின்றார். சட்டென்று திரும்பியவர் என்னைப் பார்த்தார். சிரிக்க முயன்றார். நான் தலைகுனிந்து கொண்டேன்.
"

இந்த வரிகள் நாம் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் ஒருவரை, இன்னொருவர் தாழ்மைப் படுத்திவிடும் சூழ்நிலையை கச்சிதமாக விளக்குகிறது. நான் என்னுடைய வாழ்நாளில் பலமுறை அந்தப் பையனின் நிலையில் இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய விளக்கம் நம்மை தானாகவே, அவர் லங்கா தகனம் நடனத்தை பூரணமாக ஆடி பெரிய பேர் பெறவேண்டும் என்று எண்ண வைக்கிறது. கடைசியில் அவர் மேடை நோக்க்கி வருவதுடன் ஜெ.மோ கதையை முடித்துவிட்டார். அவருக்கான அரசியல் அவருக்கு பாவம். ஒரு வார்த்தை சொல்லவில்லை அவ்வளவே பூரண ஆட்டதை ஆசான் ஆடியதாக.

மற்ற கதை பத்மவியூகம், இது எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு கதை தான் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு புனைவு. மஹாபாரதத்தில் அபிமன்யூவின் அத்யாயங்கள் சில பக்கங்களே என்றாலும் அவனுக்கென்று தனியான ஒரு மதிப்பு உண்டு மஹாபாரதத்தில். இந்தக் கதை அபிமன்யூவின் தாய் சுபத்திரை உடைய மனநிலையை படம் பிடித்துக் காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. மெதுவாக சுபத்திரையை அர்ஜுனன் திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி, அபிமன்யூவின் மரணத்திற்குப் பிறகு நீர்க்கடன் செலுத்தும் வரை நீள்கிறது கதை.

கடவுள் பற்றிய கதையாகச் சொல்லாமல் மஹாபாரத கதாப்பாத்திரங்களை சாதாரண மனிதர்களாகக் காட்டியிருப்பார். என்னவோ சின்ன வயதில் இருந்தே மஹாபாரதக் கதைகளின் மீதான காதல் உண்டு. வெவ்வேறு கதையாடல்களுடன் நான் மஹாபாரதத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று, இந்த குறுநாவல் தொகுப்பில் இன்னமும் நிறைய கதைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இந்த பத்மவியூகம்.

உண்மையில், இந்த மூன்று கதைகளையும் பற்றி எழுத வேண்டாமென்றே நினைத்திருந்தேன் மடம் மற்றும் மண் பற்றி எழுத நினைத்திருந்தேன் ஆனால் இதை எழுதியிருக்கிறேன்.

Related Articles

17 comments:

Sridhar Venkat said...

'மடம்' என்னை மிகவும் பாதித்த கதை.

ஜெயமோகனை எழுத்து மிகவும் பிரம்மாண்டமானதாய் இருக்கும். ஒவ்வொரு கதை / குறுநாவல் / புத்தகமும் ஒவ்வொரு அனுபவம்.

எழுத்து அவருக்கு இயல்பானது... மூச்சு விடுவது போல. அவருடைய விஷயஞானம் பிரமிக்கதக்கது.

Damodar chandru said...

ஏறக்குறைய ஜெயமோகனின் அனைத்துப்படைப்புகளையும் வாசித்துள்ளேன்.டார்த்தீனியம் படித்தபோது
நீங்கள் அனுபவித்த உணர்வுகளை நானும் அனுபவித்தேன்.முன்பை விட இப்பொழுது அவரின் எழுத்துக்கள் நீர்த்துவிட்டதைப்போல் தோன்றுகிறது.

மோகன்தாஸ் said...

ஸ்ரீதர் ஆமாம் ஜெயமோகனின் படைப்புலகம் வித்தியாசமானதுதான்.

தாமோதர் அப்படித் தெரியவில்லை எனக்கு. ஆனால் உங்களுக்கு அப்படி ஏன் தோன்றியது என்று எழுதினால் நானும் எனக்கு அப்படிப் பட்டதா என தெளிந்து கொள்வேன்.

saha said...

tarthenium - story i also felt the same. i did read it twice.

But i do admire JM mainly for his depth knowledge about his "Dhargam" knowledge for "Vishnupuram",

For everybody i would say. initially it will be slow to read.

But i would suggest every body passing the initial hickup. and read completely.

Regards,
Sahridhayan

மோகன்தாஸ் said...

Sahridhayan - நன்றிகள் விஷ்ணுபுரம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் புத்தகம் கையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வாரத்தில் கிடைக்குமென்று நினைக்கிறேன்.

உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்.

லக்கிலுக் said...

மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எனக்கு பிடித்ததாக டார்த்தீனியம் வெகுகாலமாக இருந்தது, புதுமைப்பித்தனின் கபாடபுரம் படிக்கும் வரையில்.

மோகன்தாஸ் said...

லக்கிலுக், இந்த தடவை புதுமைப்பித்தன் சிறுகதைகள் அள்ளிக்கிட்டு வந்திருக்கேன். உங்களால கபாடபுரத்திற்கு 'பாரீஸ் ஹில்டன்' படம் போட்ட கர்சீப் போடப்பட்டுவிட்டது. ;)

ஜமாலன் said...

நண்பருக்கு.. தாமதாக வருகிறேன்.

பதிவிற்கு வந்த புதிதில் திருச்சிப்பற்றி சிவாஜி படம் பார்த்தது பற்றி.. படித்தேன். நினைவில் இருப்பது தொழில் பொட்டி தட்டுவது என்பது மட்டும். உங்கள் பதிவுகள் பற்றி பேச நிறைய இருக்கிறது. நாட்களும்...

இப்பதிவு ஜெமோ என்பதால்.. நான் ஜெமோவின் ஒரே ஒரு நாவல் மட்டுமே படித்துள்ளேன். மற்ற எதுவும் நான் படித்ததில்லை. அது விஷ்னுபுரம். நண்பர் ராமாணுஜத்தின் கைங்கர்யம். அதை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு மிகப்பெரிய ஆட்கொல்லுதலுக்கு ஆளாகி அந்த உணர்வில் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன் அதே ராமாநூஜத்திற்கு.நகைமுரண் என்னவென்றால் அவருக்க எழுதிய 3 பெரிய கடிதங்களையும் எனது நட்சத்திரப்பதிவில் வெளியடலாம் என்று இருந்தேன். ஒன்று மட்டுமே முடிந்தது அது ஹேராம். சரி விஷ்னுபுரத்திற்கு வருவோம்.

ஒரு நவீன காப்பியம்தான் அது. அரசியல்ரீதியாக அது எனது நிலைக்கு எதிரானது. ஆணால் அது ஏற்படுத்தும் தர்க்க உணர்வும் பிரமிப்பும் அலாதியானது. அதன்பிறகு ஜெமோ-வின் பல வம்படிகள்.. எற்படுத்தப்படடிருக்கும் பரிவட்டங்கள் லாபிகள் அவரை அனுகுவதைவிட விலக்கவே அதிகம் செய்தன. அது எனது பலவீனமாகக்கூட இருக்கலாம். ஆணால் அவர் ஒரு பிரமாண்டங்களை விரிக்கும் எழுத்தாற்றல் கொண்டவர். விஷ்னுபுரம் பற்றிய அப்பதிவை சீக்கரத்தில் வெளியிடுவேன் நேரமிருப்பின் படியுங்கள். சமீபத்தில் அவர் குற்றாலக் கவிதைப் பட்டறையில் பெசியிருப்பவை (திண்ணையில் உள்ளது) விமர்சனத்திற்கு உரியது. அது விஷணுபுரத்தில் அவர் செய்ய முயன்றதையே மறுக்கும் ஒரு கோட்பாடாக உள்ளது. போர்ஹே சிறந்த படைப்பாளி ஆணால் மோசமான தத்துவவாதி என்பார்கள்... ஒருவேளை இது ஜெமோ -விற்கும் பொருந்துமோ?

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன் said...

//முன்பை விட இப்பொழுது அவரின் எழுத்துக்கள் நீர்த்துவிட்டதைப்போல் தோன்றுகிறது.//

தாமொதர் கூறியதைப்போலத்தான் மற்றும் சில ஜெமோ தொடர்வாசிப்பு நண்பர்களும் கூறினார்கள். நாம் வாசிக்காமல் ஆந்த முடிவை எடுக்க முடியாது.

மோகன்தாஸ் said...

ஜமாலன் - பேசுவோம் என் பதிவுகளில் எழுதியிருக்கும் அனைத்தும் என் அரசியலுக்கு உட்பட்டு நான் ஒப்புக்கொண்டதாக நம்பும் விஷயங்களைத்தான் அதனால் பேச எனக்குத் தடை கிடையாது. ;)

ஜெ.மோ இப்பொழுது எழுதுவதைக் குறைத்துக் கொண்டதைப் போல் தோன்றுகிறது(அவர் முன்பு எழுதிய வேகத்துடன் ஒப்பிட) அவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

ஜெ.மோ.வின் தத்துவங்களைப் பற்றி எனக்கு மிகப்பெரிய அளவில் மாறுபட்ட கருத்து உண்டு. 'நினைவின் நதியில்' பற்றி விமர்சனம் எழுதினால் நிச்சயம் வைக்கிறேன் அப்பொழுது.

ஜமாலன் said...

//பேசுவோம் என் பதிவுகளில் எழுதியிருக்கும் அனைத்தும் என் அரசியலுக்கு உட்பட்டு நான் ஒப்புக்கொண்டதாக நம்பும் விஷயங்களைத்தான் அதனால் பேச எனக்குத் தடை கிடையாது. ;)//

நண்பருக்கு பேசுவோம் என்று சொன்னதை நீங்கள் தவறுதலாக் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக...

பேசுவோம் என்றது உரையாடலுக்கரிய விஷயங்களைக் கொண்டது உங்கள் பதிவு என்கிற அர்த்தத்தில்தான். எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மோகன்தாஸ் said...

இல்லை ஜமாலன் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நானும் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன உரையாடலைத்தான் என் பக்கத்தில் இருந்து பேச எனக்குத் தடையெதுவும் இல்லை என்று சொன்னேன். ;)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தலை தலையாக
அடித்துக் கொண்டாலும்
தலையே தலை

ஜெயமோகனின் டார்த்தீனியம் மாஜிக்கல் ரியலிசமாமே.? எங்கே போய் முட்டிக்கறது.? மோகன் தாஸிடம்தான்.

ஜெயமோகனின் எழுதும் வேகம் குறைந்துவிடவில்லை. விரைவில் ஒரு 2000 பக்க நாவலை (அதற்கடுத்து இரண்டு 3000 பக்க நாவலாம்) வெளியிட இருக்கிறார். அதைப் பற்றி அவரே 'தர்க்க பூர்வமாய்' கருத்துக்களள முன்வைப்பார் பாருங்கள்...

அவரது கவிதைகளைப் பற்றி ஏன் யாரும் ஒன்றும் சொல்லவில்லை (இவருக்காகத் தான் அன்றே புதுமைப் பித்தன் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன் : பாட்டுக் களஞ்சியமே, பல சரக்குக் கடை வையேன்).

மோகன்தாஸ் said...

சுந்தர், பேசுவோம்.

அதை நான் ஏன் மாஜிக்கல் ரியலிஸ கதை என்று சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும் என்றே படுகிறது அதை நான் விளக்கவும் செய்திருக்கிறேன்.

நீங்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்று சொல்லுங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இல்லை, நண்பரே. நீங்கள் டார்த்தீனியத்தை மாஜிக்கல் ரியலிசம் என்பதற்கு கொடுக்கும் காரணங்கள் make belief தன்மை, உண்மையில் நடக்க முடியாதது போன்றவை.

make belief என்பது... கதையில் லாரன்ஸ் என்று எழுதாமல் டபிள்.ஒய்.லாரன்ஸ் என்று எழுதுவது அல்லது ஒரு பாக்கெட் சிகரெட் என்று எழுதாமல் ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டர் என்று எழுதுவது (இவை உதாரணம் மட்டுமே).

உண்மையில் நடக்க முடியாது.. இதை பாலமித்ரா, அம்புலி மாமா கதைகளிலும் நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் Gabriel Garcia Marquezன் one hundred years of solitude படித்திருப்பீர்கள் தானே... அதன் தளமே வேறு.

டார்த்தீனியம் மிக மோசமான அரசியலை முன் வைப்பது; அது கருப்பர்களுக்கு எதிரான அரசியல். அந்தப் பிரதியை அப்படித்தான் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது...

மோகன்தாஸ் said...

//டார்த்தீனியம் மிக மோசமான அரசியலை முன் வைப்பது; அது கருப்பர்களுக்கு எதிரான அரசியல். அந்தப் பிரதியை அப்படித்தான் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது...
//

இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுத முடியுமா?

அல்லது யாராவது இதைப்பற்றி முன்னமே எழுதியிருந்தால் லிங்க் கிடைக்குமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுத முடியுமா?

அல்லது யாராவது இதைப்பற்றி முன்னமே எழுதியிருந்தால் லிங்க் கிடைக்குமா?/

நான் இந்தக் கதையைப் படித்தது இது கணையாழியில் வெளிவந்த புதிதில் (1993ல் என்று நினைக்கிறேன்). மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. முடிந்தால் பழைய இதழ்களைத் தேடிப் பார்த்து (கிடைத்தால்) விரிவாக எழுதுகிறேன்.

இது போன்ற பார்வையை அப்போதே (அ மார்க்ஸ் - என்று நினைக்கிறேன் - மற்றும் சிலர்)முன் வைத்திருக்கிறார்கள். இவ்விதமான விமர்சனம் வந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. வலையில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.